பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 8வது நாளாக நடந்து வருகிறது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப முடியுமான என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிவோம் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் பேச்சுவார்த்தை நடத்த முதல்வரை அறிவுறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்லுமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை 90 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும் என்றும் விளக்கமளித்துள்ளது.
இதையடுத்து உயர்நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என்று நீதிபதி கூறியுள்ளார். அரசும் ஊழியர் சங்க நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக தற்போது உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும், முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும் என்றும் நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.