புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாவது நாளாக இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது,
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அதிக நாட்கள் தங்கி இருந்த தலைவர் நான் தான். கஜா புயல் நிவாரண உதவியில் மத்திய அரசு எப்போதுமே உங்களுக்கு உதவ உங்களுடனேயே உள்ளது. அதற்காகத்தான் முதன் முதலில் மத்திய அரசு புயல் பாதிப்பிற்கு முன்பே மத்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கடற்படையை அனுப்பி உதவியது.
தொடர்ந்து மின்சாரத்திற்காக மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு எந்தெந்த வகையில் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள், மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் பிரசாரம் செய்கின்றன.
மக்களிடம் அவர்கள் அவ நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடாது. மத்திய அரசு மக்களுடன் தான் உள்ளது. அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும். பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பை அரசே செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.