பாஜகவின் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ட்விட்டர் மூலம் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர் - தமிமுன் அன்சாரி
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் கலவரம் ஏற்பட்டால் எச்.ராஜா தான் முழுக்காரணம்
- டெல்லி வன்முறைக்கு கபில் மிஸ்ரா பேச்சு முக்கிய காரணம் என கூறப்படுகிறது
- தமிழக காவல்துறை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
தமிழகத்தில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ஆகியோர்தான் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்ளுக்கும் ஏற்பட்ட மோதல், பின்னர் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இதனால் வீடுகள், கடைகள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாகக் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனால் வடகிழக்கு டெல்லியில் கலவரமும், பதட்டமும் மேலும் அதிகரித்தது. அடுத்தடுத்து 2 நாட்கள் இந்த கலவரங்கள் நீடித்தது.
இதையடுத்து, தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்திருந்தாலும், நேற்றிரவும் வடகிழக்கு பகுதியில் ஒரு சில இடங்களில் மோதல்கள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டெல்லி போன்று தமிழகத்தில் வன்முறை நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, பாஜகவின் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ட்விட்டர் மூலம் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ஆகியோர்தான். அவர்கள் மீது தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்லியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் ட்விட்டர் பதிவுக்குப் பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அது தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது போன்ற பல்வேறு சர்ச்சை கருத்துகளை எச்.ராஜா அவரது சமூகவலைத்தள பக்கங்களில் அடிக்கடி பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.