அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால், இந்தியாவில்.. எச்சரிக்கும் ராமதாஸ்!
ஹைலைட்ஸ்
- அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால், இந்தியாவில்.. எச்சரிக்கும் ராமதாஸ்!
- பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 32 பேர் பலி
- அமெரிக்கா கற்றுத் தரும் படிப்பினையும், நாம் கற்க வேண்டிய பாடமும்
உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால், இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 693 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
தெரிவித்துள்ளது. அண்மையில் வந்த இந்த தகவல்கள் அறிக்கைகளை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000த்தை கடந்தது. தொடர்ந்து, 4வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் மேல்
அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பதிவில் அமெரிக்கா கற்றுத் தரும் படிப்பினையும், நாம் கற்க வேண்டிய பாடமும் என்ற தலைப்பில் கூறியதாவது, கடந்த மாதம் இதே தேதியில் அமெரிக்க மக்கள்தொகையில் 0.0001 விழுக்காட்டினர் கூட கொரோனா வைரஸ் குறித்து பேசத் தயாராக இல்லை. இன்னும் கேட்டால் அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.
ஆனால், சரியாக ஒரு மாதம் கழித்து இன்றைய நிலையில் ஒட்டுமொத்த அமெரிக்காவும் கொரோனாவை நினைத்து கதறிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கொரோனா அமெரிக்காவை பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது.
அத்தனைக்கும் காரணம்... அமெரிக்காவின் அலட்சியம் தான்.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,197. அமெரிக்காவிலோ இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 39 ஆயிரத்து 788. இந்தியாவை விட 80 மடங்கு அதிகமாக உள்ளது.
20 நாட்களுக்கு முன்பாக அலட்சியமாக பேசிய டிரம்ப், இப்போது அடுத்து என்ன ஆகுமோ? என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். ஊரடங்கு பிறப்பிக்க மறுத்த அவர், இப்போது ஏப்ரல் 30-ம் தேதி வரை சமூக இடைவெளி நடைமுறையை நீட்டித்திருக்கிறார்.
தனது பரம்பரை எதிரியான ரஷ்யாவிடமிருந்து ஒரு விமானம் நிறைய முகக்கவசங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை உதவியாக பெற்றிருக்கிறது. சுருக்கமாக கூறினால் கொரோனாவை அடக்க உலக நாடுகளிடம் அமெரிக்கா மண்டியிட்டுக்கொண்டிருக்கிறது.
20 நாட்கள் அலட்சியமாக இருந்ததாலும், ஊரடங்கு பிறப்பித்தால் வணிகம் பாதிக்கப்பட்டு விடும் என்று கருதியதாலும் அமெரிக்கா இன்று மிகப்பெரிய பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால், இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும்.
அதனால் தான் சொல்கிறேன். ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள். சில விஷயங்களை தியாகம் செய்யுங்கள். அடுத்த சில வாரங்களில் இந்தியா கொரோனா வைரஸை வெற்றி கொள்ளும்; நாடு நலம் பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.