This Article is From Aug 01, 2018

‘நாங்கள் இணைந்தால்…’- ரஜினியுடனான கூட்டணி குறித்து மனம் திறந்த கமல்

தமிழ் சினிமாவின் இரு பெறும் நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர்

ஹைலைட்ஸ்

  • பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் தொடங்கினார் கமல்
  • ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு தெரிவித்தார்
  • ஜெயலலிதா இறப்புக்குப் பின்னரே இருவரும் தீவிர அரசியலில் இறங்கினர்

தமிழ் சினிமாவின் இரு பெறும் நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். கமல் கட்சி ஆரம்பித்து கள அரசியலில் முனைப்புக் காட்டி வருகிறார். ரஜினியோ, அரசியலின் அடுத்த மூவ் என்ன என்பது குறித்து ரகசியம் காத்து வருகிறார். இந்நிலையில் ரஜினியுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கமல்ஹாசன்.

கடந்த பிப்ரவரி மாதம் தனது ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை அதிகாரபூர்வமாக ஆரம்பித்தார் கமல். மேலும், தேர்தல் ஆணையத்திடம் அதை முறைப்படி பதிவு செய்தார். தொடர்ந்து சுற்றுப் பயணங்கள், பொதுக் கூட்டம் என்று பிஸியாக இருக்கிறார் கமல். ரஜினி சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி, ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’ என்று கூறி பகீர் கிளப்பினார். 

இந்த இரு பெரும் பிரபலங்களின் நட்பு பல பத்தாண்டுகளாக தொடர்பவை. ரஜினியின் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கமலுடன் தான் அதிகமாக நடித்து உச்சம் பெற்றார். குறிப்பாக கமல், படத்தின் ஹீரோவாகவும் ரஜினி, அதில் ஸ்டைலான வில்லனாகவும் தோன்றினர். ஒரு கட்டத்திற்கு மேல், இருவரும் பிரிந்து நடித்தால் தான் நீண்ட நாள் நிலைத்து நிற்க முடியும் என்று முடிவெடுக்கின்றனர். அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினர்.

அதைப் போலத்தான், தீவிர அரசியலில் இறங்குவதற்கு முன்னர், இருவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில், ‘நாம் இரு வேறு அரசியல் பாதையில் பயணிக்கலாம். ஆனால், கண்ணியம் காக்க வேண்டும்’ என்ற முடிவெடுத்தனராம். 

ஆனால் இருவரும் ஒரே பாதையில் சென்றால். இது குறித்து நமது தளத்துக்கு பிரத்யேகமாக கமல் அளித்தப் பேட்டியில், ‘நாங்கள் இருவரும் ஒன்றாக வருவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. ஆனால், அது நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன’ என்று முதன்முறையாக ரஜினியுடனான் கூட்டணி குறித்து பேசியுள்ளார் கமல்.

அவர் மேலும், ‘மக்கள் நீதி மய்யம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடும். குறைந்தபட்சம் தமிழகத்திலாவது போட்டியிடுவோம். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலை நாங்கள் மாற்றுவோம். அதுதான் எங்களின் முக்கிய நோக்கம். சீக்கிரமே எங்கள் கட்சியின் கொள்கை குறித்து தெரிவிப்போம்’ என்று கூறியுள்ளார். 

கமல், மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால், கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற போது, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

.