விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உயர்மின் அழுத்த கோபுரங்களுக்கு பதிலாக, பூமிக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. புதைவட வழியாக மின்சாரம் கொண்டு செல்வது முடியாத காரியம், தொழில்நுட்ப வசதிகள் அந்தளவில் கண்டுபிடிக்கவில்லை.
அரசியலுக்காக உயர்மின்கோபுரம் குறித்து விவசாயிகளிடம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்தால் தமிழகத்திற்கு போதுமான மின்சாரம் கிடைக்காமல் சென்று விடும்.
விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்கும் போது ஒரு தென்னை மரத்திற்கு ரூ.32,000 இழப்பீடு வழங்கப்படும். ஒவ்வொரு திட்டத்தையும் எதிர்த்து இப்படி போராடி கொண்டே இருந்தால் தமிழகத்திற்கு ஒரு திட்டமும் வராது, நஷ்டம் தான் ஏற்படும். இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் உண்மையான விவசாயிகளே இல்லை.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைவரும் விவசாயிகளிடம் எடுத்து சொல்ல வேண்டும், விவசாயிகளை வஞ்சிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று அவர் கூறினார்.