தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையிலான டீம் விசாரணை நடத்தி வந்தது. இதில் பல இடங்களில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
பொன்மாணிக்க வேலின் மிடுக்கான தோற்றமும், செயல் வேகமும் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்து என்ன அதிரடியை அவர் நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது.
இதற்கிடையே பொன் மாணிக்கவேலின் விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. பெரும்பாலான வழக்குகளில் தங்களது திறமைக்கு ஏற்பட்ட சவாலாக கருதி, வழக்குகளை மாநில போலீசாரே விசாரிப்பார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் சிபிஐக்கு ஒரு மாநில அரசு வழக்கை மாற்றாது.
ஆனால் இந்த வழக்கில் தடாலடியாக சிபிஐக்கு வழக்கை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர். மிக முக்கியமாக, இன்று ஓய்வு பெறவிருந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தனர்.
பொன் மாணிக்கவேல் இன்னும் ஓராண்டுக்கு சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிப்பார். ஹைகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவு யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது. ஓராண்டுக்குள் வழக்கை முடித்து விடுவேன் என்று பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். இதனால் சிலைக்கடத்தல் வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.