This Article is From Oct 10, 2018

டிஜிட்டல் சேவைகளை மேலும் நவீனமாக்க ஐஐடி-யுடன் கை கோக்கும் தமிழக அரசு!

டிஜிட்டல் சேவைகளை மேலும் நவீனமாக்க இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸுடன், கை கோத்துள்ளது தமிழக அரசு

டிஜிட்டல் சேவைகளை மேலும் நவீனமாக்க ஐஐடி-யுடன் கை கோக்கும் தமிழக அரசு!

கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இந்த புதிய டிஜிட்டல் நவீனமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Chennai:

டிஜிட்டல் சேவைகளை மேலும் நவீனமாக்க இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸுடன், கை கோத்துள்ளது தமிழக அரசு. இது குறித்த புரிந்தணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 

கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இந்த புதிய டிஜிட்டல் நவீனமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு இ-கவர்னென்ஸ் நிறுவனத்தின் செயலர், கே.மிஸ்ரா ஐ.ஏ.எஸ் மற்றும் ஐஐடி மெட்ராஸ் சார்பில் பேராசிரியர் ரவிந்திர கெட்டு ஆகியோர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

நேற்று சென்னையில் இது குறித்து நடந்த நிகழ்ச்சியில் புரிந்தணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் மற்றும் தொலைத் தொடர்புத் துறை செயலர் சந்தோஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த புதிய முன்னெடுப்பு குறித்து கே.மிஸ்ரா, ‘இன்றைய நிலைமையில், மக்கள் ஒரு சேவையை எதிர்பார்த்துக் கேட்கும் நேரத்தில் அது செய்து தரப்படுவதை விட, மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல சேவைகளை வழங்குவது தான் முக்கியமான விஷயமாக இருக்கிறது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் தேவைகளையும் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக் கொள்வது மிக அவசியமானது ஆகும். ஐஐடி மெட்ராஸ் போன்ற ஒரு உயரிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து, டிஜிட்டல் சேவையை உயர்த்த தமிழகம் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று பேசினார். 

.