நாட்டில் சைபர் செக்யூரிட்டி வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- இணையப் பயன்பாடு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது
- குற்றங்கள் உயர்ந்திருப்பதால் சைபர் வல்லுனர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது
- 120 மணி நேர ஆன்லைன் கோர்ஸை மெட்ராஸ் ஐஐடி அறிமுகம் செய்துள்ளது
Chennai: நாட்டின் உயர் கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடியில் ஆன்லைன் மூலம் சைபர் செக்யூரிட்டி பாடம் நடத்தப்படவுள்ளது. வார இறுதி நாட்களில் நடத்தப்படும் இந்த வகுப்புகளின் மொத்த கால அளவு 120 மணி நேரமாகும்.
அத்துடன் 52 சைபர் செக்யூரிட்டி நுணுக்கங்கள் மற்றும் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் 30 மணி நேர செயல்முறைப் பயிற்சியும் இந்த பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
இணைய பயன்பாடு எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. முன்பை விட ஆன்லைன் பண பரிவர்த்தனையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், நமது அந்தரங்க விஷயங்களையும், ஆவணங்களையும் பாதுகாப்பது சவாலாக இருந்து வருகிறது.
அதே நேரத்தில், ஏ.டி.எம். கொள்ளை, டெபிட் கார்டு மோசடி, தகவல் திருட்டு போன்ற சைபர் குற்றங்கள் பல்கிப் பெருகியுள்ளதால், சைபர் செக்யூரிட்டி வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஆன்லைன் கோர்ஸை சென்னை ஐஐடி ஆரம்பித்துள்ளது.
'Certified Cyber Warriors (CCW) v3.0' என்று அழைக்கப்படும் இது 120 மணி நேர பாடமாகும், இதில் வார இறுதிகளில் 'நேரடி' ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சைபர் குற்றங்கள், தகவல் திருட்டு, ஹேக் செய்யப்படுவதல் போன்ற சைபர் பிரச்னைகளில் இருந்து முக்கிய துறைகள் மற்றும் தொழில்துறைக்கு உதவ இந்த பாடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சைபர் செக்யூரிட்டி பாடம் குறித்து, ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், “வங்கி மற்றும் நிதி சேவைகள், காப்பீடு மற்றும் பொது நிறுவன துறைகளில் எந்தவொரு மீறலும் ஒரு பெரும் நிதிச் செலவை மட்டுமல்லாமல், மனித வாழ்க்கையையும் பாதிக்கும். இந்த ஒவ்வொரு துறைகளிலும் தகவல் பாதுகாப்பு சிக்கல்களைக் கையாள தகுதியான சைபர் செக்யூரிட்டி வல்லுனர்களின் தேவை தற்போது அவசியமாக உள்ளது.'' என்று தெரிவிததார்.