கடல் அலைகளின் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கும் மேம்படுத்தப்பட்ட டர்பைன்.
Chennai: இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மெட்ராஸ் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளின் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கும் மேம்படுத்தப்பட்ட டர்பைன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டர்பைன்-சேம்பர் இணைப்பு குறித்த அவர்களின் மிக சமீபத்திய ஆய்வுகள் புகழ்பெற்ற சர்வதேச எரிசக்தி ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐ.ஐ.டி மெட்ராஸில் கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பிரித்தெடுப்பதில் பணியாற்றும் பெருங்கடல் பொறியியல் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் அப்துஸ் சமத் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்குகிறார்.
டாக்டர் சமத் மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவின் பணி இந்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்ற நோக்கங்களை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் பயன்பாடுகளை எடுத்துரைத்த டாக்டர் அப்துஸ் சமத், "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சிக்கு சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் முதன்மையானது என்றாலும், இவை மட்டுமே வரம்பற்ற மின்சக்தி ஆதாரங்கள் இல்லை. இந்தியாவின் நீண்ட கடற்கரை, கடல்-ஆறு சங்கமிக்கும் பகுதிகள், ஓடைகள் மற்றும் வளைகுடாக்கள் என ஏராளமானவை இந்த வரம்பற்ற மின்சக்தியை வழங்கும் திறன் கொண்டவை. அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைப் எதிர்கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது மற்றும் இந்திய அரசாங்கத்தின் பெருங்கடல் மேம்பாட்டுத் துறையின் தலைமையில் ஐ.ஐ.டி மெட்ராஸின் பெருங்கடல் பொறியியல் துறை, 1983 முதல் அலை ஆற்றலை யதார்த்தத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது."
அலை ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஐ.ஐ.டி மெட்ராஸில் டாக்டர் அப்துஸ் சமத்தின் குழுவின் சமீபத்திய ஆராய்ச்சிக்கு, என்.ஐ.ஓ.டி உடன் இணைந்து, இந்திய அரசாங்கத்தின் பூமி அறிவியல் அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி குழுவில் திரு. அரவிந்த் ஜார்ஜ், திருமதி சுசித்ரா ரவிக்குலர், திரு. ஆர். அனந்த்நாராயண், மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி பெருங்கடல் பொறியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் அப்துஸ் சமத் ஆகியோர் இணைந்துள்ளனர். திரு. ஜார்ஜ் இந்த ஆய்வறிக்கையின் முதல் ஆசிரியர், இப்போது அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெறவுள்ளார். மறுபுறம், ஆராய்ச்சியாளர்கள், திரு. பிரசாத் துத்கோங்கர், திரு. பிரேன் பட்நாயக், மற்றும் டாக்டர் பூர்ணிமா ஜலிஹால் ஆகியோர் என்.ஐ.ஓ.டி-யை சேர்ந்தவர்கள். டாக்டர் ஜலிஹால் NIOT என்.ஐ.ஓ.டி-ன் எரிசக்தி மற்றும் நன்னீர் குழுவின் தலைவராக உள்ளார்.
டாக்டர் அப்துஸ் சமத்தின் குழுவினரின் இந்த ஆராய்ச்சி அலை ஆற்றல் பகுதியில் எதிர்கால ஆராய்ச்சிக்கு ஒரு நல்ல துவக்கப்பக்கத்தை வழங்கும் என்றும் இதுபோன்ற எதிர்கால ஆராய்ச்சி டர்பைன் சக்தி வெளியீடு, டர்பைனின் சராசரி செயல்திறன் மற்றும் டர்பைன் தொடர்புபடுத்துவதற்கான டர்பைன்-சேம்பர் செயல்திறன் ஆகியவற்றை ஆராயும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்கும்.