தற்போது இறந்த மாணவியின் செல்போனில் கிடைத்துள்ள தகவலை வைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Chennai: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸில் (IIT Madras) பயின்று வந்த மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை மாநகரப் போலீஸ் (Chennai Police), சிசிபி-க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளனர். காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். அதில் தனது தற்கொலைக்கு ஐஐடி-யில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், தங்கள் மகள் மத ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர், மாணவிக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் வழக்கில் சம்பந்தமுடையதாக கருதப்படுவோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
“இந்த வழக்கு விசாரணைக்காக நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்கியுள்ளோம். ஏடிசி மேகலினா தலைமையில் அந்த விசாரணைக் குழு செயல்படும். மிகவும் உணர்ச்சிமிக்க வழக்கு என்பதால் அனுபவம் உள்ள அதிகாரிகளை விசாரணைக்காக நியமித்துள்ளோம்,” என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐஐடி-யில் எம்.ஏ., படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவி, சென்ற வாரம் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, தற்கொலை தொடர்பான கடிதங்களோ குறிப்போ போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது இறந்த மாணவியின் செல்போனில் கிடைத்துள்ள தகவலை வைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
“நியாயமான, சுதந்திரமான, வெளிப்படையான அதே நேரத்தில் விரைந்து முடிக்கும் விசாரணை இந்த வழக்கில் செய்யப்பட வேண்டும்,” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 11 மாதங்களில் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் நடக்கும் 5வது தற்கொலைச் சம்பவம் இது. அதில் 4 பேர் மாணவர்கள், மீதம் ஒருவர் ஆசிரியர். இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களும் அந்தப் பட்டியலில் அடங்குவர்.
கல்வி சார்ந்து கொடுக்கப்படும் அழுத்தம், மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட காரணங்கள் மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
“கல்வி சார்ந்து ஐஐடி மெட்ராஸில் கொடுக்கப்படும் அழுத்தம் சில நேரங்களில் மிகத் தீவிரமாக மாறலாம். குறிப்பாக செமஸ்டர் தேர்வுகளின் போது… அதே நேரத்தில் மாணவர்கள் ஆலோசனை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன,” என்கிறார் ஐஐடி-யில் பி.டெக் படிக்கும் மாணவர் ஒருவர்.
ஐஐடி நிர்வாகம், மாணவி தற்கொலை பற்றி, “மிகவும் மன வருத்தத்துடன், இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி இறந்துவிட்டதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு ஐஐடி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில், ஐஐடி கல்வி நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 52 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஐஐடி நிர்வாகமும் இதைத் தடுக்க நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தபோதும், அது போதாது என்று சொல்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்.
“மனதின் ஆழத்தில் எது வலியைத் தருகிறதோ… எது கோபத்தை உண்டாக்கிறதோ… எது துன்பம் தருகிறதோ..? அதைப் பற்றித்தான் நிறைய பேர் பேச மறுக்கிறார்கள். அல்லது வெகு சிலரிடம் பேசுகிறார்கள். நெருக்கமானவர்களிடம் பிரச்னைகள் பற்றி மனம் திறந்து பேசினால், குறைந்தபட்சம் அடுத்த என்ன செய்வது என்றாவது தெளிவு பிறக்கும்,” என்கிறார், கல்வி சார்ந்த அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வதை ஆய்வு செய்த மனநல மருத்துவர் எஸ்.மோகன் ராஜ்.