திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இன்று சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் பாரிவேந்தர் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார்
ஹைலைட்ஸ்
- இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தார் பாரி வேந்தர்
- சந்திப்பின்போது, தங்களது ஆதரவு திமுக-வுக்கே என்று உறுதியளித்தார்
- இன்றைய சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படடவில்லை
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ள பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி, திமுக-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, இன்று சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் பாரிவேந்தர் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார். அப்போது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஐ.ஜே.கே முழு ஆதரவு கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், ‘தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களும் உணர்கிறார்கள். இது குறித்து கடந்த புதன் கிழமை எங்கள் தலைமை அலுவலகத்தில் கூடிய அவசர செயற்குழுக் கூட்டத்திலும் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்துக்குத் தேவையான மாற்றத்தை மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் கொடுக்க முடியும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று அவரை நேரில் சந்தித்து வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-வுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளோம்' என்றார்.
உடனே ஒரு செய்தியாளர், ‘தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசினீர்களா?' என்றார். அதற்கு பாரிவேந்தர், ‘இன்றைய சந்திப்பு என்பது, அவர்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டத்தான். தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பின்னர் பேசப்படும்' என்று முடித்தார்.
இன்னொரு செய்தியாளர், ‘தே.ஜ.கூ கூட்டணியிலிருந்து விலகுவதற்கு என்ன காரணம்?' என்றார். ‘நாங்கள் ஏன் அந்தக் கூட்டணியில் இருந்து விலகினோம் என்பது பலருக்குத் தெரியும். எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், பல்கலைக்கழகத்துக்கும் தொல்லை கொடுத்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்கள் இருக்கும் இடத்தில் எங்களால் இருக்க முடியாது' என்று திட்டவட்டமாக சொல்லி புறப்பட்டார் பாரிவேந்தர்.