This Article is From Jul 16, 2018

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த் இந்தியர்களின் பரிதாப நிலை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், சிறையில் 24 மணி நேரமும் கை விலங்குடன் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த் இந்தியர்களின் பரிதாப நிலை!
Astoria, Oregon:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், ஃபெடரல் சிறைச் சாலைகளில் 24 மணி நேரமும் கை விலங்குடன் இருப்பதாக அங்குள்ள செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன், மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்பவர்கள் விவகாரத்தில் ‘ஸீரோ டாலரென்ஸ்’ காட்டப்படும் என்று கூறினார். இதன் மூலம் சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை எல்லையிலேயே மடக்கி, அவர்களை சிறையில் அடைக்கும் கொடுமை நடந்து வருகிறது. இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதைப் போன்று, அமெரிக்காவில் இருக்கும் ஓரிகன் மாகாண ஃபெடரல் சிறையில் வாடி வருகின்றனர். அவர்கள் எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்து வருவதாக அங்கிருக்கும் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்களாக இருப்பதாக தெரிகிறது. அவர்கள் அனைவரும், சொந்த நாட்டில் மத ரீதியிலான அச்சுறுத்தல் காரணமாகவோ அரசியல் அச்சுறுத்தல் காரணமாகவோ வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சம் புக வேண்டி வந்துள்ளனர். ஆனால், தற்சமயம் அவர்கள் அனைவரும் கூட்டாக சிறையில் அடைக்கப்பட்டு கைதிகளைவிட மோசமான நிலையில் நடத்தப்பட்டு வருகின்றனர். 

இந்தியர்களை நேரில் சென்று பார்த்த கம்யூனிட்டி கல்லூரி பேராசிரியை நவ்னீத் கௌர், ‘சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் நிலையைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஒரு நாட்டிலிருந்து வெளியேறி இன்னொரு நாட்டில் குடிபெயர அனுமதி கேட்டுள்ளனர். சட்டப்படி அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால், குற்றவாளிகளைவிட மோசமான நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் அவர்களுக்கு கை விலங்கு போடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கை விலங்குடன் தான் உணவு அருந்துகிறார்கள். மிகவும் கீழ்த்தரமான நிலையில் அவர்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இவ்வளவு கொடுமைகளுக்குப் பிறகும் அவர்கள், சொந்த நாட்டுக்குத் திரும்ப விருப்பப்படவில்லை. அங்கு அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகின்றனர்’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய அவர், தொடர்ந்து,

‘சீக்கியர்களாக இருப்பவர்களுக்கு நிலைமை இன்னும் மோசம். அவர்களுக்கு டர்பன் அணிந்து கொள்ளக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை. அமெரிக்காவில், யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த மதத்தைப் பின்பற்ற அனுமதியுண்டு. ஆனால், அந்த அனுமதியும் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது’ என்று திடுக்கிடும் தகவலை சொன்னார் கௌர்.

இன்னோவேஷன் லா லேப் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு, அங்க தங்கவைக்கப்பட்டிருக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கு சட்ட ரீதியிலான ஆதரவு தர முடிவு செய்துள்ளது. அவர்களுடன் கௌர் உள்ளிட்ட சில அமெரிக்க வாழ் இந்தியர்கள் இணைந்து வேலை செய்து வருகின்றனர். 

சிறையில் இருக்கும் அனைத்து இந்தியர்களும் அமெரிக்காவில் இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை பரிசீலினை செய்யும் நடவடிக்கை அடுத்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ‘அமெரிக்காவில் ஏன் இருக்க விரும்புகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு ஒவ்வொருவர் இடத்திலும் நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிகிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற் போல் இந்தியர்களை தயார் செய்யும் பணியை தற்போது கௌர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர். 
 

.