மே.3ம் தேதிக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப நடவடிக்கை தேவை: திருமாவளவன்
ஹைலைட்ஸ்
- புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப நடவடிக்கை தேவை
- மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
- அவர்களைக் குறிப்பிட்ட நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைப்பது அவசியமானதாகும்
மே 3-ம் தேதிக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்குத் திரும்பிப் போவதற்கு மத்திய, மாநில அரசுகள் படிப்படியான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச்.24ம் தேதி முதல் ஏப்ரல்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டது.
ஆனாலும், கொரோனா நோய் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து வருகிற மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது, கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் மிகப்பெரும் சவாலாகவும் தடையாகவும் இருப்பது புலம்பெயர் தொழிலாளர்களுடைய பிரச்சினையே ஆகும். அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான் சமூகப் பரவல் அதிகரிக்காமல் தடுக்க முடியும்.
மே 3 ஆம் தேதிக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்குத் திரும்புவதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு ஊர் திரும்புவதற்கு முன்னதாகவே அவர்களுக்கு நோய்த் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கான ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அடைபட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநில அரசுகள் தம்மால் இயன்ற ச உதவிகளைச் செய்கிறார்கள் என்றாலும் அவை போதுமானவையாக இல்லை.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களும் கொரோனா நோய்த் தொற்று ஆபத்துள்ள இடங்களாக உள்ளன என்கிற புகார்கள் எழுகின்றன. எனவே, அவர்களை மேலும் அங்கேயே அடைத்து வைத்திருப்பது அரசாங்கம் எடுக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையே சீர்குலைத்துவிடும்.
ஆகவே, மே 3-ம் தேதிக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்குத் திரும்பிப் போவதற்கு மத்திய, மாநில அரசுகள் படிப்படியான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். அப்படி ஊர் திரும்பும் அவர்களைக் குறிப்பிட்ட நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைப்பது அவசியமானதாகும். அதற்குரிய முன்னேற்பாடுகளை இப்போதே மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்
தமது ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றிய தெளிவான செயல் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.