This Article is From Feb 08, 2019

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் 

2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் 

மீனவ மற்றும் விவசாய துறைக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயரில் கல்லூரி, விவசாயிகளுக்கான பயர்க்கடன், சென்னையில் பிரமாண்ட கார் மற்றும் பைக் பார்க்கிங் வசதி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கின்றன. 

மத்திய பட்ஜெட் கடந்த 1-ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் வருவதால் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு ஓபிஎஸ் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்....

1. மின்சார பேருந்து
தமிழகத்தில் மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவையில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். 


2. கலாம் கல்லூரி
ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்படும். 


3. 3 ஆயிரம் ஸ்கூட்டர்
மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3 ஆயிரம் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


4. புயல் நிவாரணம்
கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டித் தரும் திட்டத்திற்கு ரூ. 1700 கோடி ஒதுக்கீடு.
 

5. சென்னையில் பார்க்கிங் வசதி
சென்னையில் 2 லட்சம் கார்கள், 2 லட்சம் பைக்குகள் நிறுத்தும் வகையில் நிலத்தடி வாகன வசதி ரூ. 2 ஆயிரம் கோடியில் ஏற்படுத்தப்படும். 


6. கடன் சுமை
தமிழக அரசுக்கு ரூ. 3.97 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 42 ஆயிரம் கோடி நடப்பாண்டில் அதிகரித்திருக்கிறது. 

7. 20 ஆயிரம் வீடுகள் 
சூரிய மின் சக்தி வசதியுடன் 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்

8. விபத்து நிவாரணம் உயர்வு
ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் 

9. வருவாய் எதிர்பார்ப்பு
2019-20ல் தமிழக அரசின் வருவாய் ரூ. 1.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

10. மாணவர்களுக்கு பஸ்பாஸ்
மாணவர்கள் பயன்படுத்தும் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.766 கோடி ஒதுக்கீடு

11. மூடப்பட்ட டாஸ்மாக்
இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896- ல் இருந்து 5,198- ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

12. விவசாயத்திற்கு...
விவசாயத்துறைக்கு  10,550 ரூபாய் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

13. மெட்ரோ ரயில் 
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தால் சேவைப்பகுதி 172.91 கி.மீ ஆக அதிகரிக்கும். பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


14. தமிழ் இருக்கைகள்
ஹார்வர்டு பல்கலைக்கழகம் போல் பிற பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும் 
 

15. தனிநபர் வருமானம் உயர்வு
2011-2012 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,03,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது


16. பொருளாதார வளர்ச்சி
2019-2020-ல் மாநில பொருளாதார வளர்ச்சி 8.16% ஆக எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. 


17. உணவு பதப்படுத்தும் பூங்கா
பிரான்ஸ் நிறுவனம் ரூ2 ஆயிரம் கோடியில் உணவு பதப்படுத்தும் பூங்காவை தமிழகத்தில் அமைக்க உள்ளது. 


18. தமிழ் மொழி வளர்ச்சிக்கு...
 தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


19. மீனவர் நலன்
வரும் நிதியாண்டில் மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்  உதவியால் ஆபத்துக்காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும்.

20. அணைகள் பாதுகாப்பு
தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் ரூ. 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

21. ஆடு வழங்கும் திட்டம்
விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு

22. அரசு லேப்டாப்
2019-20 ஆம் ஆண்டில் மடிக்கணினி வழங்குவதற்காக ரூ. 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

23. விளையாட்டு
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.168.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

.