அரசியல் நிலைப்பாடு குறித்து பரபரப்பான அறிக்கையை நடிகர் அஜித் குமார் வெளியிட்டிருக்கும் நிலையில் அவருக்கு திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி வாழ்த்துக் கூறியுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்கள் சிலர் அக்கட்சியில் சேர்ந்தனர். அவர்கள் அஜித் ரசிகர்கள் என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, அஜித்குமார் நல்ல நடிகர். மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர். அவரது ரசிகர்கள் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
பாஜகவுடன் அஜித் ரசிகர்களை குறிப்பிட்டு பேசப்பட்டதால் இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடும் எண்ணம் இல்லை. குறிப்பிட்ட கட்சியை ஆதரியுங்கள் என்று என் ரசிகர்களை நிர்பந்திக்கவில்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன். அரசியலில் விருப்பு வெறுப்பு உண்டு. அதை யார் மீதும் திணிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
அவரது விளக்கம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி வந்தார். அவரிடம் அஜித் அறிக்கை குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கனிமொழி, ''அஜித் எடுத்திருப்பது நல்ல முடிவு; அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.