1000 டன் வெங்காயங்கள் டெல்லி, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
New Delhi: இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்கள் மாநிலங்களுக்கு குறைந்தது ரூ. 49 முதல் ரூ. 58 வரையில் வழங்கப்படும் என்று மத்திய உணவுத்துறை மற்றும் நுகர்வோர் நல அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் மத்திய அரசு 12 ஆயிரம் டன் வெங்காயங்களை இறக்குமதி செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டில் உற்பத்தி குறைந்தது, அதிகப்படியான விலையேற்றம் காரணமாக மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
துருக்கி, எகிப்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் 12 ஆயிரம் டன் வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் ஆயிரம் டன் வெங்காயங்கள் ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்மாத முடிவுக்குள் இன்னும் கூடுதலாக 36 ஆயிரம் டன் வெங்காயங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும். இதன்மூலம் விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இந்த தகவலை மத்திய உணவுத்துறை மற்றும் நுகர்வோர் நல அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இன்றைக்கும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றில், ரூ. 100 வரையில் வெங்காயம் சிற்பனையாகி வருகிறது. இறக்குமதி மற்றும் காரிப் பயிர் அறுவடையால் விலை குறைவு ஏற்படத் தொடங்கியுள்ளது.
டெல்லியில் ரூ. 70க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனையாகிறது. கடந்த மாதம் இதே தேதியில் ரூ. 118 வரையில் விற்பனையாகி இருந்தது. இதேபோன்று மும்பையில் கடந்த மாதம் ரூ. 120க்கு விற்பனையான ஒரு கிலோ வெங்காயம், தற்போது ரூ. 80க்கு விற்பனையாகிறது.
காரிப் பயிர் விளைச்சல் காரணமாக விண்ணை நோக்கிச் சென்ற வெங்காயத்தின் விலை தற்போது 25 சதவீதம் வரைக்கும் குறைந்துள்ளது.