New Delhi: தன் மீதான விமர்சனங்களுக்கு நவ்ஜோத் சிங் சித்து பதிலளித்து சில மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரும், சித்துவின் பழைய நண்பருமான இம்ரான் கான் நன்றியும் ஆதரவும் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் சித்துவை புகழ்ந்து ட்வீட் செய்த இம்ரான் கான் “ சித்து அமைதிக்கான தூதுவர்” என்றார். மேலும் “ இந்தியாவில் அவரை விமர்சிப்பவர்கள், அமைதிக்கு எதிரானவர்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சித்துவுக்கு ஆதரவாக செய்த ட்வீட்டில், இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தைகள் பற்றியும் இம்ரான் கான் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் பதவி ஏற்பு விழாவில், அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி அணைத்ததற்காகவும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபருடன் முன் வரிசையில் அமர்ந்ததற்காகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்து மீது கடும் விமர்சனங்கள் கூறப்பட்டன. அதற்கு பதிலளித்த சித்து தான் அரசியல் காரணத்துக்காக பாகிஸ்தான் செல்லவில்லை, தன்னுடைய பழைய நண்பரின் அழைப்பை ஏற்று தான் சென்றேன் என பதிலடி கொடுத்திருந்தார். இப்போது இம்ரான் கான், சித்துவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இருந்த போதும், சித்து மீதான விமர்சனங்கள் குறையாது என்று தெரிகிறது. குறிப்பாக பா.ஜ.க தரப்பில் இருந்து தொடர்ந்து ராகுல் காந்தி மீதும், சித்து மீதும் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.