இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடைபெறும் என்று கூறுவது முட்டாள்தனம் என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.
Kartarpur: இந்தியாவுடன் பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள், ராணுவம் உள்ளிட்டவை நல்லுறவை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அரசியல் தலைவர்களின் கருத்துகளால் இருநாட்டு உறவவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டுடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இந்த நிலையில் கர்தார்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இம்ரான் கான் பேசியதாவது-
இந்தியா உடனான நல்லுறவை பாகிஸ்தான் விரும்புகிறது. நமக்கும் இந்தியாவுக்கும் இடையே காஷ்மீர் என்கிற ஒரேயொரு பிரச்னைதான் உள்ளது. அதனை ஏன் நம்மால் தீர்க்க முடியாது?
நான் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் அந்நாட்டு மக்கள் என்னிடம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு அமைதி ஏற்படுவதில் உடன்பாடில்லை என்று கூறுகின்றனர்.
இப்போது சொல்லிக் கொள்கிறேன். நான் இந்நாட்டின் பிரதமர். எனது கட்சி மற்றும் மற்ற கட்சிகள், எங்கள் நாட்டின் ராணுவம் என நாங்கள் அனைவரும் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடைபெறும் என்று சிலர் கூறுகின்றனர். உண்மையிலேயே அவர்கள் முட்டாள்கள். அணு ஆயுதப்போரால் இரு தரப்புக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். நாங்கள் போரை வெறுக்கிறோம்.
இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.