Islamabad: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் ஆகஸ்ட் 18-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். முன்னதாக ஆகஸ்ட் 11-ம் தேதி பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களும், இம்ரான் கானின் பழைய நண்பர்களுமான கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் அழைக்கப்பட இருப்பதாக, பி.டி.ஐ கட்சி தெரிவித்துள்ளது.
அழைப்பு வருவதற்கு முன்பாகவே,இது குறித்து தகவல் தெரிவித்த நவ்ஜோத் சிங் சித்து, தான் நிச்சயம் பதவியேற்பு விழாவுக்கு செல்ல இருப்பதாகவும், இம்ரான் நம்பத் தகுந்த மனிதர் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், கவனமாக பதிலளித்துள்ளர் கபில் தேவ், அழைப்பு வந்தால், இந்திய அரசின் அனுமதி பெற்று பதிவியேற்பு விழாவுக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.
சுனில் கவாஸ்கரும், முந்தைய பட்டியலில் இருந்த அமிர் கானும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 1992-ம் ஆண்டு தன் தலைமையில் உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி நண்பர்களுக்கும் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற இம்ரான் கான் 90களின் மத்தி ஆண்டுகளில் பி.டி.ஐ கட்சியை தொடங்கினார். 20 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு இப்போது அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.