Tamil vs Sanskrit Debate - "நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று சொல்வது சமஸ்கிருதம். ஆனால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்வது தமிழ்"
Tamil vs Sanskrit Debate - இந்திய அளவில் இயங்கும் 3 சமஸ்கிருத தனியார் பல்கலைக்கழகங்களை, மத்திய அரசின் பல்கலைக்கழகங்களாக மாற்ற மசோதா கொண்டு வந்துள்ளது பாஜக தலைமையிலான மத்திய அரசு. இந்த மசோதா குறித்தான விவாதத்தின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழில் ஆற்றிய உரை கவனம் பெற்றுள்ளது.
தனது உரையின்போது ராசா, “நான் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இப்போதுதான் முதன்முறையாக என் தாய் மொழியான தமிழில் உரையாற்றுகிறேன். அதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த மசோதா,” என ஆரம்பித்தார்.
தொடர்ந்து, “சமஸ்கிருதம்தான் இந்தியவின் தலையாய மொழி என்றும், அதன் வழியேதான் இந்தியப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு சிந்தனைகள் இருக்கின்றன. ஒன்று சமஸ்கிருத - ஆரியப் பண்பாட்டுச் சிந்தனை. இன்னொன்று திராவிட - தழிழ்ப் பண்பாட்டுச் சிந்தனை. இரண்டுக்கும் தனித் தனி இலக்கியங்கள், சிறப்புகள் உண்டு.
சமஸ்கிருதத்துக்கு எவ்வளவு தாராளமான மனப்பான்மை கொண்டு சொன்னாலும் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பழமையானது என்று எவராலும் நிறுவ முடியாது. ஆனால், தமிழ் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அதனால், எந்த விதத்திலும் சமஸ்கிருதத்தைத் தமிழோடு ஒப்பிட முடியாது.
நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று சொல்வது சமஸ்கிருதம். ஆனால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்வது தமிழ். பெண்ணாக பிறப்பது பாவம் என்று சொல்கிறது சமஸ்கிருதம். பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று சொல்வது தமிழ்.
ஆனால், நீங்கள் கொண்டு வந்திருக்கும் மசோதாவில், இந்தியச் சிந்தனை மரபு சமஸ்கிருதத்தில் மட்டும்தான் உள்ளது என்பதை மறைமுகமாக நிறுவப் பார்க்கிறீர்கள். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. அழிவில் இருக்கும் ஒரு மொழியைக் காக்க நடவடிக்கை எடுங்கள். எங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், இன்னொரு மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துமானால், அதை நாங்கள் முழு மூச்சோடு எதிர்ப்போம்,” என்று பல குறுக்கீடுகளுக்கு மத்தியில் பேசினார் ராசா.
அவரின் பேச்சுக்கு நடுவே, மத்திய அமைச்சர் போக்ரியல், “தயவு செய்து இந்த மசோதாவை, தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையிலான பிரச்னையாக மாற்ற வேண்டாம்,” என்றார்.