விழா நடக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன
ஹைலைட்ஸ்
- 12 கோடி பேர் இந்த முறை கும்பமேளாவில் கலந்துகொள்வார்கள் என கணிப்பு
- பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது
- மார்ச் 4 வரை இந்த விழா நடைபெறும்
Prayagraj: மகர சங்கராந்தியான இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா விழா தொடங்கியது. இதையடுத்து கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஒன்றாகும் சங்கத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். உலகின் மிக அதிகமாக யாத்ரீகர்கள் கூடும் விழாவான கும்பமேளாவில் இந்த ஆண்டு 12 கோடி பேருக்கு மேல் பங்கேற்பார்கள் என்று நம்பப்படுகிறது.
மிக அதிக மக்கள் கும்பமேளா விழாவுக்கு வருவார்கள் என்பதால், கும்ப் நகரிப் பகுதியில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்ப் நகரி, 32000 ஹெக்டேர்கள் பரப்பளவைக் கொண்டது.
விழா நடக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. போன்டூன் பாலம் மார்க்கமாக சென்றுதான் மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் நீராட முடியும். அந்தப் பாலத்திலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
15 மாநில அரசுத் துறைகள், 28 மத்திய அரசுத் துறைகள் மற்றும் 6 மத்திய அமைச்சகத் துறைகள் இந்த முறை கும்பமேளா விழாவை சுமூகமாக நடத்திட பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கும்பமேளாவுக்கென்றே பிரத்யேக வானிலை அறிவிப்பு மையங்களை நேற்று தொடங்கி வைத்தார். இந்த மையங்கள் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பக்தர்களுக்குத் தகவல் கொடுக்கும். ‘கும்ப மேளா வானிலை சேவை' என்ற மொபைல் செயலியும் இந்த முறை உருவாக்கப்பட்டு, பக்தர்களுக்கு வானிலை குறித்தான அப்டேட்ஸ்களை வழங்கி வருகிறது.
முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரயாக்ராஜ் மாவட்டத்தில்தான் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வண்ணங்களால் விழாக் கோலம் பூண்டுள்ளன. மார்ச் 4 ஆம் தேதி வரை இந்த கும்பமேளா விழா நடைபெறும்.