This Article is From Jul 29, 2019

இஸ்ரேல் தேர்தல் பிரசார விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி, தொடர்ந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரைப் பாராட்டிய முதல் உலகத் தலைவர் நேதன்யாஹு

இஸ்ரேல் தேர்தல் பிரசார விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பொருளாதார, ராணுவ மற்றும் பல்வேறு துறைகளில் நட்புறவு நிலவி வருகிறது

ஹைலைட்ஸ்

  • மோடி, நேதன்யாஹுவுடன் இருக்கும்படியான பதாகை வைக்கப்பட்டுள்ளது
  • நேதன்யாஹு, புதின் மற்றும் ட்ரம்ப் ஆகியோருடன் இருக்கும் பதாகையும் உள்ளன
  • செப்டம்பர் 17-ல் இஸ்ரேலில் தேர்தல் நடைபெற உள்ளது
Tel Aviv:

இந்தியாவில் தேர்தல்கள் ஓய்ந்திருக்கலாம். ஆனால், இஸ்ரேலில் கூடிய விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இஸ்ரேலில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி, தேர்தல் நடக்க உள்ளது. தற்போது பதவியில் இருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவரின் கட்சி சார்பில்தான், இஸ்ரேலில் இருக்கும் ஓர் கட்டடத்தில் மோடியும் நேதன்யாஹுவும் இருக்கும் படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்த படத்தை இஸ்ரேலைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த கட்டடத்தில் மற்ற பக்கங்களில், ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோருடன் நேதன்யாஹு இருக்கும் படங்களும் இருக்கின்றன. உலகத் தலைவர்கள் மத்தியில் நேதன்யாஹுவுக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டும் வகையில் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பொருளாதார, ராணுவ மற்றும் பல்வேறு துறைகளில் நட்புறவு நிலவி வருகிறது. பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாட்டுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. 

பிரதமர் மோடி, தொடர்ந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரைப் பாராட்டிய முதல் உலகத் தலைவர் நேதன்யாஹு. “மிகவும் பிரமிக்கவைக்கும் வெற்றியைப் பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். நமது நட்புறவு மேலும் வலுவாக இருக்க பாடுபடுவோம்” என்று நேதன்யாஹு வாழ்த்து தெரிவித்தார். 

.