This Article is From Sep 16, 2019

Dig At PM: உங்களை ’56’ என்றும் தடுக்க முடியாது; தந்தைக்கு கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து!

P Chidambaram: 6 ஆண்டுகளில் இல்லாத அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்துள்ளதையும், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும், பொருளாதார மந்தம் குறித்தும் அரசை கார்த்தி சிதம்பரம் (Karti Chidambaram) சாடியுள்ளார்.

Dig At PM: உங்களை ’56’ என்றும் தடுக்க முடியாது; தந்தைக்கு கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து!

Karti Chidambaram: ப.சிதம்பரம் (P Chidambaram) தனது 74வது பிறந்தநாளில் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். (File)

New Delhi:

ஊழல் வழக்கின் விசாரணைக்காக சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு (P Chidambaram) இன்று 74வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, சிறையில் இருக்கும் தனது தந்தைக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் (Karti Chidambaram) உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக தந்தை ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ள 2 பக்கங்கள் கொண்ட அந்த பிறந்தநாள் கடிதத்தில், சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடந்த பல்வேறு நிகழ்வுகளை விளக்கியதுடன், பாஜக அரிசின் 100 நாள் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பளவை சுட்டிக் காட்டியும் விமர்சித்துள்ளார்.

“உங்களுக்கு 74 வயது ஆகிறது. உங்களை எந்த '56'-ஆலும் தடுக்க முடியாது. வீட்டில் நீங்கள் இல்லாதது எங்களின் இதயத்தை நொறுக்கி உள்ளது. வீடு திரும்பும்போது கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடலாம்.

சிறையில் உங்களுக்குச் செய்தித்தாளும், குறைந்த நேரம் தொலைக்காட்சி பார்க்கும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவேன். வெளியில் என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். 

சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தீர்கள். ஆனால், அது முடியவில்லை. நாங்கள் மிகவும் பெருமையுடன் அன்றைய நிகழ்வுகளைப் பார்த்தோம். அதில் நிறைய நாடகங்கள் இருந்தன. 

விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதில் எந்த நாடகமும் இல்லை. ஆனால், அதன் பிறகுதான் பெரிய நாடகம் நடந்தது என விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பை இழந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனை மோடி கட்டியணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வை தெரிவித்துள்ளார். 
 


இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகளை நமது பிரதமர் தனது பக்தர்கள் நம்புவதை விட சற்று மேலே எடுத்துகொள்கிறார் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் விண்வெளித் திட்டம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.. இஸ்ரோவால் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் பியூஷ் கோயல், புவிஈர்ப்பு கோட்பாட்டை நியூட்டனிடமிருந்து பறித்து, ஐன்ஸ்டீனுக்கு கொடுத்து விட்டார் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதேபோல், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளாக இல்லாத அளவு 5 சதவிகிதமாக குறைந்தது, காஷ்மீர் 40 நாட்களுக்கும் மேலாக முடங்கியிருந்த நிலையில் அங்கு விளையும் ஆப்பிள்களை நேரடியாக கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்தது போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார். 

தங்களின் வயதான 74ஐ ஒப்பிடுகையில் 100 ஒன்றும் பெரிதல்ல. அரசியல் நாடகத்திற்கு எதிராக உண்மையின் துணையுடன் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டா போல் வெளிவருவீர்கள். உண்மையின் வெற்றிக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இறுதியாக, தற்போது நிகழ்த்தப்பட்டு வரும் அரசியல் நாடகத்திற்கு எதிராக போராடி உண்மையின் துணையுடன் வெளி வருவீர்கள் என நம்பிக்கை இருப்பதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

 

.