உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது - நிர்மலா
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனது 2வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்தியாவின் நுகர்வை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும் அவர் தெரிவிக்க உள்ள அறிவிப்புகள் குறித்து உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன. 2008-09 நிதி ஆண்டிற்குப் பின்னர் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம், தனிப்பட்ட வரிகளில் சலுகை உள்ளிட்டவைகள் குறித்த அறிவிக்கப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020-21 பட்ஜெட் வருமானத்தை உயர்த்துவதற்கும், மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்துவதற்கும் என்று கூறி நிதியமைச்சர் தனது உரையை தொடங்கினார். ”அதிக வளர்ச்சியின் மூலம் மட்டுமே எங்கள் இளைஞர்களை லாபகரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் வேலை செய்ய முடியும்" என்று நிதியமைச்சர் கூறினார். இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோளுக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக விளங்குகிறது. "பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளது. இது பொருளாதார பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ளது.
2014 மார்ச் மாதத்தில் 52.2 சதவீதமாக இருந்த மத்திய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 48.7 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த ”பட்ஜெட் பொருளாதார வளர்ச்சி மற்றும் அக்கறையுள்ள சமுதாயத்தை சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது," 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்காக ரூ.2.83 லட்சம் கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் விவசாய கடன் கிடைப்பதை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. நிழல் வங்கிகள் என்றும் அழைக்கப்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) விவசாயத்திற்கு உதவும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சுகாதாரத் துறைக்கு ரூ.69,000 கோடியை ஒதுக்க முன்மொழிந்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை தூய்மைத் திட்ட ஸ்வச் பாரத் மிஷனுக்கு ரூ.12,300 கோடியை ஒதுக்கியுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) "மிகவும் வரலாற்று சீர்திருத்தம்" என்று கூறிய, அவர், லாரிகளின் திருப்புமுனை நேரம் கணிசமான குறைப்பைக் கண்டுள்ளது என்றார். ஏப்ரல் 2020 முதல் ஜிஎஸ்டிக்கான எளிமையான வருவாய் வடிவம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.