தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கனமழை பெய்ததால், சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, வட கடலோர மாவட்டமான சென்னையில் வெப்பசலனம் காரணமாக நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு 8 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடாமல் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை மழையாக கொட்டித் தீர்த்தது.
இரவு முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் மக்கள் சிறிது பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை நிலவி வரும் சூழலில், மழை பெய்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.