This Article is From Apr 10, 2020

கொரோனா டெஸ்ட்: ICMR சோதனையில் அதிர்ச்சி முடிவுகள்... சமூகப் பரிமாற்றமாக உருவெடுக்கிறதா கொரோனா?

இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் SARI நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் சமூக பரவலுக்கான சாத்தியங்கள் இல்லை என்பதை  கவுன்சில் தெளிவுபடுத்தியிருந்து.

கொரோனா டெஸ்ட்: ICMR சோதனையில் அதிர்ச்சி முடிவுகள்... சமூகப் பரிமாற்றமாக உருவெடுக்கிறதா கொரோனா?

ஒட்டுமொத்தமாக, 5,911 SARI நோயாளிகளில், 104 (1.8 சதவீதம்) பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

New Delhi:

இந்தியா கொரொனா தொற்றால் 5,800க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட சதவிகித்தினர் (severe acute respiratory infection-SARI) கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொற்று உள்ளவர்களோடு எவ்வித தொடர்பிலும் இல்லாதவர்கள், மற்றும் எவ்வித வெளிநாட்டு பயண வரலாற்றையும் கொண்டிராதவர்களாவார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொகுத்த தரவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, கடுமையான சுவாச நோயாளிகளில் (SARI) 38 சதவிகிதத்தினர் எவ்வித தொடர்பு அல்லது பயண வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை எனதெரியவருகின்றது. இந்த தரவுகள் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மூன்றாவது கட்டமான சமூக பரவலுக்கு சென்றுவிட்டதா என்கிற கேள்வியை எழுப்புகின்றது.

இது குறித்த சந்தேகத்தினை இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் முன்வைக்கப்பட்டபோது, SARI நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் சமூக பரவலுக்கான சாத்தியங்கள் இல்லை என்பதை  கவுன்சில் தெளிவுபடுத்தியிருந்து.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர், கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்திருப்பார்கள் அல்லது வெளிநாட்டு பயண வரலாற்றினை கொண்டிருப்பார்கள். இது நோயாளிகளை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தவும், தொற்று பரவலை தடுக்கவும் எளிய வழியாக இருந்து வந்தது. ஆனால் சர்வதேச நாடுகளின் அனுபவத்தில் தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதனைக் கண்டறிய முடியாத நிலை உருவாகும். இது சமூக பரிமாற்றமாகும். அல்லது தொற்று பரவலின் 3 வது நிலையாகும்.

கடந்த மாதம் 14-ம் தேதிக்கு முந்தைய வாரங்களில் கடுமையான சுவாச நோயாளிகள் (SARI) தொற்றின் பாதிப்புக்கு ஆளாகவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய சோதனை முறை என்பது குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு அனைத்து, கடுமையான சுவாச நோயாளிகளுக்கும் (SARI) சோதனை விரிவுபடுத்தப்பட்டபோது, குறிப்பிட்ட சதவிகிதத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் 22 முதல் 28 வரை முதல்கட்டமாகப் பரிசோதிக்கப்பட்ட 2,877 SARI நோயாளிகளில் 1.7 சதவிகிதத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 48 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

அடுத்ததாக மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை, 2,069 SARI நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் 2.6 சதவிகிதத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதாவது 2,069 SARI நோயாளிகளில் 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 5,911 SARI நோயாளிகளில், 104 பேர் (1.8 சதவிகிதத்தினர்) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் 15 மாநிலங்களில் 36 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 104 நபர்களில் 40 பேர் எவ்வித பயண வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிட்ட மாவட்டங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பகுதிகளாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது அறிக்கையில் அடையாளம் காட்டியுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொற்றால் பாதிப்படைந்த 104 நபர்களில் 58 சதவிகிதத்தினர் அதாவது கொரோனா 59 பேர் தொற்றால் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. மேலும், இதில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 85 ஆக இருக்கின்ற பட்சத்தில் 83 பேர் ஆண்களாவார்கள். அதாவது இவ்வாறு உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 81 சதவிகிதத்தினர் ஆண்களாக உள்ளனர்.

SARI என்று குறிப்பிடப்படும் கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் 21 பேரும், டெல்லியில் 14 பேரும், குஜராத்தில் 13பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  மேலும், இந்த தரவுகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது என்றும், இதுவே ஒரு மாநிலத்தின் நோய் தாக்கத்தின் தன்மையினுடைய அளவீடு அல்ல என்பதையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் 160க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.