New Delhi: தலைநகர் புது டெல்லியில் கின்டர்கார்டன் வகுப்பில் படித்து வந்த 16 குழந்தைகளை ஃபீஸ் கட்டவில்லை என்பதால் பேஸ்மன்ட்டில் அடைத்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
ஹுவாஸ் காஸியில் இருக்கும் பெண்கள் பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். ஃபீஸ் செலுத்தவில்லை என்பதற்காக குழந்தைகளை காலை 7:30 மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரை பேஸ்மன்ட்டில் அடைத்து வைத்து பள்ளி நிர்வாகம் கொடுமை செய்துள்ளதாக பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றின் தந்தையான ஜியாவுதீன், ‘குழந்தைகளை பேஸ்மன்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். என் குழந்தைக்கு ஃபீஸ் கட்டிய பிறகும், பேஸ்மன்ட்டில் அடைத்து வைத்தனர். குழந்தைகள் தண்ணீர் தாகத்தால் தவிதுள்ளனர். போலீஸ் தான் எங்களுக்கு உதவி செய்து குழந்தைகளை மீட்டுக் கொடுத்தனர். நான் ஃபீஸ் கட்டியதற்கான ரசீதை காட்டிய பிறகும், பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை’ என்று வேதனையுடன் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ‘சிறாருக்கான நீதி வழங்கும் பிரிவு 75-ன் கீழ் பள்ளிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளது போலீஸ்.