Chennai: ஒரே ஆண்டில் மட்டும் 5 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்ததாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை ராஜினாமா செய்த தஹில் ரமணி கூறியுள்ளார். அவரை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ததை தொடர்ந்து ரமணி தனது பொறுப்பை கடந்த 6-ம்தேதி ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு பிரிவு உபசார விருந்து, மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று தஹில் ரமணி கூறியதாவது-
வழக்கறிஞர்கள் சிறப்பான ஒத்துழைப்பு அளித்ததால் என்னால் தினமும் 70 முதல் 80 வழக்குகளை முடித்து வைக்க முடிந்தது. நான் இங்கு ஓராண்டு நீதிபதியாக இருந்த காலத்தில் மட்டும் 5,040 வழக்குகளை முடித்து வைத்துள்ளேன்.
மெல்ல மெல்ல சென்னை எனக்கு பிடித்துப் போனது. இங்கு நிலவும் வானிலை, குறைவான சுகாதாரக்கேடு, மாநிலம் முழுவதையும் இணைக்கும் சாலைகள் என பல சிறப்பு அம்சங்கள் இங்கு உள்ளன. இதனால் இங்கேயே செட்டில் ஆகுவதற்கு விரும்பி நானும், எனது கணவரும் ஒரு ப்ளாட்டை இங்கு வாங்கினோம்.
திருப்பதிக்கு செல்லவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லவும் சென்னை மிகவும் சவுகரியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தஹில் ரமணியின் ராஜினாமாவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஏற்றுக் கொண்டு நீதிபதி வினீத் கோத்தாரியை செயல் தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமித்துள்ளது. முன்னதாக தன்னை மேகாலயாவுக்கு மாற்றம் செய்ததை மறு பரிசீலனை செய்யுமாறு ரமணி கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவை சேர்ந்த தஹில் ரமணி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2001-ல் நியமிக்கப்பட்டார். அவர் 2020 அக்டோபர் 2-ம்தேதி ஓய்வு பெறவிருந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.