கேரளாவில் இன்று 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பெண் மருத்துவர்கள் நடனம்
- பக்திப் பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
- கேரளாவில் மொத்தம் 211 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், பக்திப் பாடலுக்கு 24 கேரள பெண் மருத்துவர்கள் நடனமாடியுள்ளனர். இரண்டரை நிமிடங்கள் அளவுகொண்ட இந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கேரளாவில் 370-க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டோரில் 211 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் மாநிலத்தில் 173 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது. அவர்கள் விரைவில் குணம் அடைந்து விடுவார்கள் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.கே. மருத்துமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர்கள், பக்திப் பாடலுக்கு அசத்தலாக நடனத்தை வடிவமைத்துள்ளனர்.
கேரளாவில் பிரபலமான 'லோகம் முழுவன் சுகம் பகரன்' என்ற பாடலுக்கு 24 பெண் மருத்துவர்கள் நடனமாடியுள்ளனர். இதனை மருத்துவர் சரண்யா கிருஷ்ணன் ஒருங்கிணைத்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து கேரளா படிப்படியாக மீண்டு வரும் சூழலில் மருத்துவர்கள் நடன வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வீடியோவை பார்க்க...
இதுகுறித்து மருத்துவர் சரண்யா கூறுகையில், 'பக்திப் பாடலுக்கு நடனம் அமைத்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் திடீரென்றுதான் தோன்றியது. மருத்துவர் குக்கூ கோவிந்தன் என்னிடம் வந்து இந்த யோசனையை அளித்தார். நான் நடனத்தை முறையாக கற்றவள். எனவே என்னிடம் நடனம் அமைக்க முடியுமா என்று அவர் கேட்டார். நானும் சம்மதித்தேன்.
எங்களது நடன வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களது வீடியோ வாட்ஸ்ஆப், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. வரவேற்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.