பாஜக - காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் ஆபாச வீடியோ காட்சியில் சிக்கியுள்ளனர்.
Bhopal: மத்திய பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ காட்சிகள் மற்றும் ஆடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் கிடைத்த தகவலின்படி முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் மற்றும் ஏராளமான அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட ஆபாச வீடியோ காட்சிகளில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் மற்றும் அதிக சொத்துக்களை கொண்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளை குறி வைத்து இந்த Honey Trap எனப்படும், தேன் வலை விரிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பெண் பாலியல் தொழிலாளிகள், கல்லூரிப் பெண்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் 200-க்கும் அதிகமான தொலைப் பேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 10-க்கும் அதிகமான உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஆபாச காட்சியில் இடம் பெற்றிருக்கும் அரசியல்வாதிகள் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
ஆபாச காட்சியில் இடம் பெற்றிருக்கும் பெண்களின் பெயரையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களில் பர்கா சோனி என்பவர், காங்கிரஸ் கட்சியின் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த அமித் சோனியின் மனைவி ஆவார்.
39 வயதாகும் சுவேதா ஜெயின் என்பவர்தான் இந்த ஓட்டுமொத்த ஆப்பரேஷனை நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர் பாஜக எம்.எல்.ஏ. பிரிஜேந்திரா பிரதாப் சிங்குக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டு நிர்வகித்து வருகிறார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சற்று ஏழ்மை நிலையில் இருக்கும் கல்லூரிப் பெண்கள் உயர் அதிகாரிகளிடம் பாலியல் தொழிலாளியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். இதற்கு ஊதியமாக அவர்களுக்கு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த ரீதியிலான பாலியல் விவகாரம் நடந்து வந்துள்ளது. அந்த வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்களும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள்.
இந்த வீடியோக்கள் அனைத்தும் சுவேதா ஜெயினின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஆபாச வீடியோவில் சிக்க வைத்த இந்தக் கும்பல் அவரிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.