பாஜக 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Delhi: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட உள்ளது.
மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிடும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற இடங்கள் சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படும்.
126 இடங்களைத் தவிர்த்து துணை முதல்வர் பொறுப்பும் சிவசேனா கட்சிக்கு வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 21-ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் 24 -ம்தேதி வெளியாகின்றன.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக உயர்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முன்னதாக பாதிக்கு பாதி தொகுதிகளில் சிவசேனா போட்டியிடும் என தகவல்கள் பரவலாக வெளியானது. இறுதியாக 126 தொகுதிகளில் போட்டியிடும் முடிவுக்கு அக்கட்சி வந்துள்ளது.
கடந்த 2014 சட்டமன்ற தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர் பாஜக அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்து வருகிறது.