This Article is From Aug 13, 2019

“18 ஆண்டுகள் கழித்து வகேஷன் எடுக்கிறேன்!”- மேன் vs வைல்ட் குறித்து நெகிழ்ந்த மோடி #Highlights

பியர் கிரில்ஸ், தனது நிகழ்ச்சியில் இதற்கு முன்னரும் பல சிறப்பு விருந்தினர்களை அழைத்துள்ளார்.

“18 ஆண்டுகள் கழித்து வகேஷன் எடுக்கிறேன்!”- மேன் vs வைல்ட் குறித்து நெகிழ்ந்த மோடி #Highlights

“சிறு வயதில் எப்போதாவது பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருந்ததா?” என்று பியர் கிரில்ஸ் ஒரு கட்டத்தில் கேட்க, 

ஹைலைட்ஸ்

  • பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி 'மேன் vs வைல்ட்'
  • உத்தரகாண்டில் இருக்கும் ஜிம் கார்பட் தேசியப் பூங்காவில் ஷூட்டிங் நடந்தது
  • நிகழ்ச்சியில் இயற்கை குறித்து நிறைய பேசியுள்ளார் பிரதமர் மோடி
New Delhi:

இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் பியர் கிரில்ஸ் உடனான “மேன் vs வைல்ட்” நிகழ்ச்சியில் பங்கெடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது குறித்தான நிகழ்ச்சி நேற்று டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. 

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் “மேன் vs வைல்ட் வித் பியர் கிரில்ஸ் மற்றும் பிரதமர் மோடி” சிறப்புத் தொகுப்பு ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தோன்றினார். உத்தரகாண்டில் இருக்கும் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடந்தது. 

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நபராக தோன்றும் பியர் கிரில்ஸ், மோடி குறித்து பேசுகையில், “மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தும், புதிய விஷயங்களில் ஈடுபாட்டுடனும் நடந்து கொண்டார்” என்று புகழாரம் சூட்டினார். 

பிரதமர் மோடி, நிகழ்ச்சியின்போது, “மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதுதான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. வளர்ச்சியில்தான் எனது கவனம் இருக்கும்” என்று விளக்கினார்.

பியர் கிரில்ஸ், தனது நிகழ்ச்சியில் இதற்கு முன்னரும் பல சிறப்பு விருந்தினர்களை அழைத்துள்ளார். இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். 

ஒரு கட்டத்தில் கிரில்ஸ், மோடியிடம், “உங்களின் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது. பிரதமராக உங்கள் கனவுகள் என்ன, அரசியல் பிரசாரங்களுக்கு முன்னர் பயம் இருந்துள்ளதா” உள்ளிட்ட தொடர் கேள்விகளை முன்வைத்தார். 

அதற்கு மோடி, “பயம் குறித்து என்னிடம் சரியான பதில் கிடையாது. ஏனென்றால் அதை நான் அனுபவித்தது இல்லை. நான் எப்போதும் நேர்மறையாக மட்டுமே சிந்திக்கக் கூடியவன். அனைத்தையும் நேர்மறையாக மட்டுமே பார்க்கக் கூடியவன். அதனால் நான் எந்த விஷயத்திற்காகவும் சலிப்படைவதோ ஏமாற்றமடைவதோ இல்லை” என்றார். 

தொடர்ந்து அவர், “ஆனால் எனது இளைய நண்பர்களுக்கு நான் எதாவது சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையைப் பகுதி பகுதியாக பிரித்துப் பார்க்காதீர்கள். நம் வாழ்க்கையை ஒரு முழுமையாக பார்த்தால் அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பது புரியும். இறங்குமுகமாக வாழ்க்கை இருந்தால், கவலைப்பட வேண்டாம்… அங்கிருந்துதான் ஏறுமுகம் ஆரம்பிக்கும்” என்று அட்வைஸ் கொடுத்தார். 

இயற்கையை பாதுகாக்க வேண்டியது குறித்தும், ஒருவரின் பேராசைக்காக மொத்த இயற்கை வளத்தையும் அழிக்கக் கூடாது என்றும், எதிர்கால தலைமுறைகளுக்கு இயற்கை வளங்களை அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

“சிறு வயதில் எப்போதாவது பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருந்ததா?” என்று பியர் கிரில்ஸ் ஒரு கட்டத்தில் கேட்க, 

“நான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தேன். அந்த மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக 13 ஆண்டுகள் உழைத்தேன். அது என் வாழ்க்கையில் புதிய பயணமாக இருந்தது. பிறகு என் நாடு, நான் பிரதமராக பணியாற்றிட வேண்டும் என்று நினைத்தது. அதனால் கடந்த 5 ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறேன். 

எனது கவனம் எப்போதும் வளர்ச்சி நோக்கித்தான் இருந்தது. அதில் எனக்கு மன நிறைவு இருக்கிறது. இது ஒரு வகேஷன் என்று சொன்னால், 18 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் நான் முதன்முறையாக வகேஷன் எடுத்துக் கொள்கிறேன்” என்று பணிவுடன் கூறினார். 

ஒரு கட்டத்தில் மோடியும் கிரில்ஸும் அடர் காட்டுக்குள் நுழையும்போது, “இங்கு புலிகள் இருக்க வாய்ப்பிருக்கிறது” என்கிறார். அதற்கு மோடி, “கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார். இயற்கை குறித்து நாம் என்றும் அச்சப்படக் கூடாது. நாம் அப்படி நினைக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது” என்றார். 

  

.