Read in English
This Article is From Jul 02, 2019

மும்பையைப் புரட்டிப்போடும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மழை; 16 பேர் பலி!

மும்பையில் இருக்கும் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)
Mumbai:

இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவும் மும்மை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் இடங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரத்தில் இருக்கும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளன. பல விமானங்கள் மற்றும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அங்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “இந்திய வானிலை ஆய்வு மையம், மும்பையில் இன்றும் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அவசர வேலை இல்லையென்றால் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதேபோல அவசர கால சேவைகளைத் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலக நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mumbai rain: வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் ஃபட்னாவிஸ். 

மும்பையில் இருக்கும் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

மும்பையில் தரையிறங்குவதாக இருந்த 54 விமானங்கள் அகமதாபாத், கோவா மற்றும் பெங்களூருவுக்கு திசை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தின் பிரதான ரன்-வே நேற்றிரவு மூடப்பட்டது. தற்போதைக்கு ரன்வே ஒன்று மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. 
 

Advertisement
Advertisement