ஹைலைட்ஸ்
- காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்
- அங்கிருந்த 44 சிறுமிகளில் 21 பேர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர்
- இதுதொடர்பாக 10 பேரை காவல்துறை கைது செய்துள்ளது
Muzaffarpur, Bihar: பீகாரின் முசாபர்பூர் நகரில் செயல்பட்டு வரும் பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரின் கிழக்குப் பகுதியில் உள்ள முசாபர்பூர் நகரில் பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மே மாதம் டாடா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் அமைப்பின் சார்பில் சமூக தணிக்கை பணி நடந்தது. இதில் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 44 சிறுமிகளில் 21 பேர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்த சிறுமிகளை போலீஸார் வேறு இடத்திற்கு மாற்றினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காப்பகத்தில் இருந்த பணியாளர்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களுடன் ஒத்துழைக்காத சிறுமி ஒருவரை அவர்கள் அடித்து கொலை செய்த விவகாரமும் வெளிவந்துள்ளது. இதுகுறித்து காப்பக உரிமையாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.