Nanital, Uttarakhand: உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள நைனிடாலிலிருந்து கலதுங்கிக்கு காரில் மூன்று நண்பர்கள் நேற்று சுற்றுலா சென்றனர். மலைப்பாங்கான சாலையில் வண்டி ஓடிக்கொண்டிருக்கையில் விளையாட்டாக வீடியோ எடுத்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான இளைஞர் மூவரும் முப்பது வயதுக்குக் குறைவானவர்கள் ஆவர்.
மரணமடைந்தவர் பெயர் பிரேந்தர் குமார். இவர் இராணுவத்தில் பணியாற்றி வருபவர். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடன் விபத்தில் காயமடைந்த மற்ற இருவர் சஞ்சு குன்வர், தீபு தானி ஆவர். இதில் சஞ்சு பிரேந்தரின் தம்பியும் தீபு நண்பரும் ஆவர்.
போலிசார் விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவான மொபைல் போனைக் கண்டெடுத்துள்ளனர். அதில் காரினுள் மூவரும் வீடியோ எடுத்து சிரித்துப் பேசிக் கொண்டு வந்ததும், வண்டியை ஓட்டிவந்தவர் அவ்வப்போது திரும்பி கேமராவைப் பார்த்து வந்ததும் பதிவாகி உள்ளது. பின்னர் வீடியோ தெளிவற்றுப் போகிறது. அப்போதுதான் ஓட்டுநர் நிலைதவறி வண்டி கட்டுப்பாடிழந்து
மலைச்சரிவில் உருண்டிருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
தொடரும் செல்பி விபத்துகள்:
வண்டி ஓட்டிக்கொண்டு வீடியோ எடுப்பது ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுப்பது ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் 21ம் தேதி, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், மும்பைக்கு அருகிலுள்ள சுற்றுதலாத்தலமான மாத்தரெனில் மலை உச்சியிலிருந்து செல்பி எடுக்க முயன்றபோது நிலைத்தடுமாறி 500அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார்.
கடந்த ஜூன் 18ம் தேதி கோவாவில் நடந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் செல்பி எடுத்தபோது தமிழகத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
செல்பி-மரணங்களில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் கோவாவில் 24 இடங்களில் செல்பி எடுக்கவேண்டாம் என்று போலிசார் அறிவுறுத்தி, அவற்றை 'no-selfie zones' ஆக்கி அறிவிப்புப் பலகைகள் வைத்துள்ளனர்.