Uddhav Thackeray - 'மசோதா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்'
ஹைலைட்ஸ்
- சேனா, முன்னதாக குடியுரிமை மசோதாவை விமர்சித்தது
- ஆனால், லோக்சபாவில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது
- ஆனால், ராஜ்யசபாவில் சேனா, மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பது கேள்விக்குறியே
Mumbai: மத்திய அரசு, லோக்சபாவில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, 2019-க்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது சிவசேனா. ஆனால், மசோதா குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக செயல்பட்டனர். தனது அதிகாரபூர்வ நாளிதழான “சாம்னா”-வில், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியிருந்தது சிவசேனா. “இந்த மசோதா கண்ணுக்குப் புலப்படாத பிரிவினையை உருவாக்குகிறது,” என்று சாடியது. ஆனால், வாக்கெடுப்பின்போது அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்தது. இந்நிலையில் சிவசேனாவின் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, மசோதா குறித்த தங்களது நிலைபாட்டில் மாற்றம் வரலாம் என்று அடுத்த குண்டைப் போட்டுள்ளார்.
“குடியுரிமை மசோதாவுக்கு எங்களது மீண்டும் ஆதரவைத் தரமாட்டோம். நாங்கள் கேட்கும் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றால் ஆதரவு கிடையாது. நாங்கள் லோக்சபாவில் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு தரப்பிலிருந்து பதில் வரவில்லை.
ராஜ்யசபாவில் அரசு, மசோதாவைத் தாக்கல் செய்யும்போது நாங்கள் சொன்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என்று தடாலடியான கருத்தைத் தெரிவித்துள்ளார் உத்தவ் தாக்கரே.
தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமான சிவசேனா மூத்த நிர்வாகி சஞ்சய் ராவத், “லோக்சபாவில் நாங்கள் வாக்களித்த விதத்தில் மீண்டும் ராஜ்யசபாவில் வாக்களிக்க வாய்ப்புகள் குறைவு,” என்று இவ்விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் சிவசேனா, மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ராகுல் காந்தி, “திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். அதை யார் ஆதரித்தாலும் அது இந்த நாட்டின் அடிக்கட்டுமானத்தை தகர்க்கும் முயற்சியாகவே பார்க்க முடியும்,” என்று ட்வீட்டர் பக்கம் மூலம் கொதித்துள்ளார்.
அது பற்றி பேசிய உத்தவ், “நான் மற்றவர்கள் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்கப் போவதில்லை. எனது கட்சிக்காக மட்டும்தான் நான் பேச முடியும்.
அரசு கொண்டு வரும் மசோதாவை ஆதரிப்பவர்கள் தேசபக்தர்கள் என்றும், எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் என்றும் முத்திரைக் குத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மசோதா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று பதில் கொடுத்துள்ளார்.
பாஜக கூட்டணியிலிருந்த சிவசேனா, மகாராஷ்டிராவில் அதிகாரப் பங்கீடு கொடுக்கவில்லை என்பதை முன்னிருத்தி கூட்டணியை முறித்தது. தொடர்ந்து நேரெதிர் கொள்கைகளைக் கொண்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அரியணையிலும் ஏறிவிட்டது சேனா. இந்தக் கூட்டணியை தக்கவைத்திருப்பது குறைந்தபட்ச செயல் திட்டடம் (Common Minimum Progrmme - CMP). காங்கிரஸ் தரப்பு, மசோதாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் சேனா, அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான், ‘சிஎம்பி மகாராஷ்டிராவிற்கு உள்ளே மட்டுமே' என்று புதிய பதிலைத் தெரிவித்துள்ளது சிவசேனா. அதே நேரத்தில் சிஎம்பி-யில், ‘நாட்டின் மதச்சார்பின்மையை கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தூக்கிப் பிடிக்க வேண்டும்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமை மசோதா, அடுத்ததாக ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. லோக்சபாவில் இருப்பது போல மத்திய அரசுக்கு, ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடையாது. தோழமைக் கட்சிகளின் உதவி இருந்தால் மட்டுமே அங்கு மசோதா ஒப்புதல் பெறும். சிவசேனாவுக்கு மாநிலங்களவையில் 3 எம்.பிக்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளும் மசோதா நிறைவேறுவதற்கு முக்கியப் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.