ஒடிசாவில் வீட்டுக் கிணறு ஒன்றில் 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
ஒடிசா மாநிலத்தில் வீட்டுக் கிணறு ஒன்றில் சுமார் 15 அடி நீளம் கொண்ட ராஜநாக பாம்பு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் காட்டுப்பகுதியை ஓட்டி புருஜ்ஹரி கிராமம் உள்ளது. கிராமவாசி ஒருவர் வழக்கம்போல வீட்டுக்கிணற்றில் நீர் இறைக்கச் சென்றபோது, பாம்பு போன்று ஏதோ கிடப்பதைக் கண்டார். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு பார்த்த போது அது பெரிய அளவிலான ராஜநாக பாம்பு என்பது தெரியவந்தது. பதறியடித்த கிராமத்தினர் உடனே வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர் பாம்பு பிடிப்பவருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து பின்பு சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிணற்றில் கிடந்த ராஜநாகத்தை இலகுவாக வெளியே எடுத்தனர். பிடிபட்ட ராஜநாகம் 15 அடி நீளம் இருந்தது. பின்பு, மருத்துவ பரிசோதனை செய்த அதிகாரிகள், அதை அப்படியே பாதுகாப்பாக எடுத்துச் சென்று காளிக்கோட் காட்டுப்பகுதியில் விட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தையும், பிடிபட்ட ராஜநாகத்தையும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உலகின் மிக நீளமான விஷ பாம்பு ராஜநாகம் ஆகும், இது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா காடுகளில் காணப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில், 15 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Click for more
trending news