11 கிலோ வாட்ஸ் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழந்தன.
Dhenkanal: ஒடிசாவின் தீன்கானல் பகுதியில் மின்சார கம்பிகளில் உரசியதால் ஏழு யானைகள் உயிரிழந்துள்ளன. ஓரே சம்பவத்தில் ஏழு யானைகள் உயிரிழந்திருப்பது ஒடிசாவில் இதுவே முதல்முறை.
சதார் வனப்பகுதியில் உள்ள கிராமத்தை 13 யானைகள் கடந்து சென்ற போது, 7 யானைகள் மின்சார கம்பியை மிதித்ததில் 11 கி.வாட் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன என்று வனப்பகுதியின் துணை பாதுகாப்பாளர் ஜித்தேந்திரநாத் தாஸ் கூறினார்.
இதில் இரு யானைகளின் சடலம் ரோட்டிலும், மற்ற நான்கு யானைகளின் சடலங்கள் கால்வாயிலும் கிடந்தன. வயலை ஒட்டிய கால்வாய் பகுதியை யானைகள் கடந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்த யானைகளின் உடலை உடனே அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரி சுதர்சன் பத்ரா மற்றும் ஜித்தேந்திரநாத் தாஸ் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தகவலின் படி, இந்தியாவில் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை 655 யானைகள் இறந்துள்ளது தெரிய வருகிறது. இதனால் ஒருவருடத்திற்கு 80 யானைகள் உயிரிழக்கின்றன. யானைகளின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம், மின் கசிவு, ரயில் விபத்து, வேட்டையாடுதல் மற்றும் விஷம் கொடுக்கப்பட்டு உயிரிழக்கின்றன.
ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது ரயில் மோதி யானைகள் இறக்கின்றன. இதனை தடுக்க ரயில்வே துறை 'பிளான் பீ' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. யானைகள் ரயில் தண்டவாளங்கள் அருகே செல்வதை தடுப்பதற்காக சாதனம் ஒன்றை பொருத்த திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் யானைகள் தண்டவாளத்தை நெருங்கும் முன், தேனீக்கள் போன்ற ஒலி எழுப்பி யானைகள் தண்டவாளத்தை நெருங்குவதை தடுக்கிறது.