Chennai: தமிழக நெடுஞ்சாலைத் துறையுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் எஸ்பிகே நிறுவனத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 100 கிலோ தங்கம் மற்றும் 170 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் நடந்த ஐ.டி ரெய்டுகளிலேயே இதில் தான் அதிக அளவிலான பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
<>p
எஸ்பிகே நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை மற்றும் மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. எஸ்பிகே நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் வெறும் 24 லட்ச ரூபாய் தான் பதுக்கப்பட்டிருந்ததாகவும், மற்ற எல்லா தொகையும் 10 வெவ்வேறு இடங்களில் வாகனங்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரெய்டு குறித்து தகவல் கொடுத்தவுடன், பணம் இருக்கும் கார்கள் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட தயார் நிலையில் இருந்துள்ளன.
இதுவரை நாட்டில் நடந்த ஐ.டி ரெய்டிலேயே இதில் தான் அதிக அளவு பணப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப் பொருட்களில் பெரும்பான்மையானவை டிராவல் பேக்குகளிலும், பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்களில் இருந்ததாக தெரிகறது. மேலும், முக்கிய ஆவணங்கள் மற்றும் சில கம்ப்யூட்டர்களும் இந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எஸ்.பி.கே நிறுவனத்துக்கு ஆளுங்கட்சி வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்.பி.கே நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வந்ததையடுத்து வருமான வரித் துறை இந்தச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த ரெய்டு நடவடிக்கை குறித்து திமுக, ‘எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவரின் நிறுவனத்தில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதும், அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது’ என்று கூறியது.
இந்த குற்றச்சாட்டுகளை அதிமுக மறுத்துள்ளது.