This Article is From Jul 11, 2018

‘இனி விவசாயிகள் நிம்மதியாக தூங்கலாம்!’- பஞ்சாபில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, ‘விவசாயப் பயிர்களுக்கான அடிப்படை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இனி அவர்கள் நிம்மதியாக தூங்கலாம்’ என்று பேசியுள்ளார்

‘இனி விவசாயிகள் நிம்மதியாக தூங்கலாம்!’- பஞ்சாபில் பிரதமர் மோடி பேச்சு
Muktsar:

பிரதமர் நரேந்திர மோடி, ‘விவசாயப் பயிர்களுக்கான அடிப்படை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இனி அவர்கள் நிம்மதியாக தூங்கலாம்’ என்று பேசியுள்ளார்.

சண்டிகரிலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் பாஜக மற்றும அகாலி தளம் ஆகிய கட்சிகள் இணைந்து இன்று ‘நன்றி செலுத்தும்’ பேரணியை நடத்தின. வெயில் காலத்தில் பயிரிடப்படும் 14 விளை பொருட்களுக்கான அடிப்படை விலையை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது. இதைக் கொண்டாடும் வகையிலேயே இந்தப் பேரணி ஒருங்கிணைக்கப்பட்டது.

இது குறித்து பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘நாட்டில் விவசாயிகள் தான் முதலாவதாக கவனிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியிலிருந்த அரசு விவசாயிகளின் தேவைகளை புரிந்து கொள்ளவே இல்லை’ என்று காங்கிரஸை சூசகமாக தாக்கிப் பேசினார். 

14 பயிர்களுக்கு அடிப்படை விலையேற்றப்பட்டுள்ளதால், அரசுக்குக் கூடுதலாக 15,000 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

அடிப்படை விலையேற்றம் குறித்து மோடி, ‘இனி நம் விவசாயிகள் நிம்மதியாக சுவாசிக்கலாம். அவர்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும். அதேபோல நிம்மதியாகவும் தூங்க முடியும்’ என்று உரையாற்றினார். 

அரசின் இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘உடலில் ஏற்பட்டுள்ள படுகாயத்துக்கு போடப்படும் பேண்டேஜ் போன்றது இந்த நடவடிக்கை’ என்று கூறினார்.

.