The Citizenship (Amendment) Bill - நேற்று விவதாத்ததின் போது, மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்கு எதிராக 125 பேரும் ஆதரவாக 99 பேரும் வாக்களித்தனர்.
New Delhi: Citizenship Bill - மிகவும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று ஒப்புதல் பெற்றுவிட்டது. அடுத்ததாக இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுவிட்டால், மசோதா சட்டமாக மாறிவிடும். நேற்று ராஜ்யசபாவில் மசோதா ஒப்புதல் பெறுவது கடினமாக இருக்கும் என்று பேசப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவு ஆதரவு கிடைத்தது. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்குக் கூட வாக்குகள் கிடைக்கவில்லை.
குடியுரிமை திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னதாக லோக்சபாவில் மசோதா ஒப்புதல் பெற்ற நிலையில், நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் ஆனது.
மசோதா குறித்த விவாதங்களுக்குப் பிறகு வாக்கெடுப்பு நடந்தது. அதில் மாநிலங்களவையைச் சேர்ந்த 125 உறுப்பினர்கள், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும், 99 பேர் எதிராகவும் வாக்களித்தனர் என்று தகவல் வந்துள்ளது. மத்திய அரசு, தங்களுக்கு 124 முதல் 130 வரையிலான உறுப்பினர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தது. கணக்குப் போட்டதைப் போலவே நடந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பு, 110 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று நினைத்தது. ஆனால், அது பொய்த்துப் போனது. நேற்றைய ராஜ்யசபா பலம் 223 ஆக இருந்தது. பெரும்பான்மை பெற 112 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால், அரசுக்கு அறுதிப் பெரும்பான்மையே கிடைத்துவிட்டது.
பாஜகவுடன் முன்னர் கூட்டணியிலிருந்து சிவசேனா, மசோதாவுக்கு எதிராக வாதங்களை முன்வைத்து, வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தின் பெயரிலேயே, சிவசேனா, மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தது. முன்னதாக மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது சிவசேனா.
பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. அதையும் தாண்டி பாஜகவுடன் கூட்டணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்டவையும் மசோதாவுக்கு முழு ஆதரவு தெரிவித்தன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் 64 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதே நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, சிபிஎம் உள்ளிட்டக் கட்சிகளைச் சேர்ந்த 46 பேர் எப்படியும் மசோதாவுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், மசோதாவுக்கு எதிராக 110 வாக்குகள் கட்டாயம் விழும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் 98 பேர் மட்டுமே குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர், சமாஜ்வாடி மற்றும் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் ராஜ்யசபாவுக்கு நேற்று வரவில்லை.
நேற்று விவதாத்ததின் போது, மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்கு எதிராக 125 பேரும் ஆதரவாக 99 பேரும் வாக்களித்தனர்.
அதேபோல எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. பெரும்பான்மையாக குரல் வாக்கெடுப்பின் மூலமே முடிவுகள் எடுக்கப்பட்டன.
முன்னதாக குடியுரிமை மசோதாவை, கடந்த ஜனவரி மாதமும் மத்திய அரசு ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது. அப்போது, அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்கவிலைல. தற்போது இரண்டாவது முறையாக மசோதாவைத் தாக்கல் செய்து, ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது.