மகாராஷ்டிராவில் 9 எம்.எல்.சி. இடங்கள் காலியாக உள்ளன.
New Delhi: மகாராஷ்டிராவில் சட்டமன்றத்திற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே விரைவில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் 28-ம்தேதிக்கு முன்னர் அவர் சட்டமன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் நிலையில் மாநிலத்தில் சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி கவர்னர் கோஷ்யாரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அடிப்படையில் சிவசேனா தலைமையிலான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்வராக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவர் அதற்கு முன்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. விதிகளின்படி முதல்வர் அல்லது அமைச்சராக பொறுப்பேற்பவர் 6 மாதத்திற்குள்ளாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பதவி பறிபோகும் சூழல் உருவாகும்.
தமிழ்நாட்டை போல் இல்லாமல் மகாராஷ்டிராவில் மேலவை மற்றும் கீழவைகள் உள்ளன. உத்தவ் தாக்கரேவை சட்டமன்ற மேலவை உறுப்பினராக்க (எம்.எல்.சி.) கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக சட்டமன்ற அலுவல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணிகள் நிறுத்தப்பட்டதாலும், உறுப்பினராக ஆகுவதற்கான கடைசி நாள் மே 28 நெருங்கி வருவதால் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கிடையே மகாராஷ்டிரா அமைச்சரவை சார்பாக 2 முறை கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து எம்.எல்.சி.தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு எம்.எல்.சி. தேர்தல் தொடர்பாக பேசினார். இந்த சூழலில் எம்.எல்.சி. தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார்.
கவர்னரின் இந்த நடவடிக்கையால் மகாராஷ்டிராவில் சட்டமன்ற மேலவை உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு 9 எம்.எல்.சி. இடங்கள் காலியாக உள்ளன.