நாளைய ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பில் மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஹைலைட்ஸ்
- ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறுகிறது
- எதிர்க்கட்சிகள், ஜிஎஸ்டி பகிர்வில் அதிருப்தி தெரிவித்துள்ளன
- காங்கிரஸும், ஜிஎஸ்டி பகிர்வில் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளது
New Delhi: கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட ஜிஎஸ்டி வருவாய் இழப்பை, மத்திய அரசு முழுவதுமாக கொடுக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல், கேகே வேணுகோபால் கூறியுள்ளார். நாளை ஜிஎஸ்டி கவுன்சிலின் சந்திப்பு நடக்கவுள்ள நிலையில் அட்டர்னி ஜெனரலின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. நாளைய ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பில் மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
மத்திய அரசு, ஜிஎஸ்டி பகிர்வு மூலம் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் மத்திய நிதி அமைச்சகம், வேணுகோபாலிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜிஎஸ்டி திட்டத்திற்குக் கீழ் மாநில அரசுகள் வர ஒப்புக் கொண்டதற்கு காரணமே, அதற்கு உரிய நிதிப் பங்கீடு ஒதுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டின் பேரில்தான். எனவே அதை சரிவர கொடுத்துவிட வேண்டும் என்று காங்கிரஸ், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
பிகாரின் துணை முதல்வரும், பாஜகவின் நிர்வாகிகளில் ஒருவரமான சுசில் குமார் மோடியும், ‘மத்திய அரசு ஜிஎஸ்டி இழுப்பீட்டை கொடுக்க வேண்டியது அதன் கடமை' என்று கூறியிருக்கிறார்.
அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலின் பதில்கள், மத்திய நிதி அமைச்சகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஜிஎஸ்டி சட்டம் மீது பல சந்தேகங்களை உண்டாக்கியிருப்பதாகவும் தெரிகிறது.
மத்திய அரசின் கேள்விகளும் அதற்கு கிடைத்த பதில்களும்:
மத்திய அரசு: ஜிஎஸ்டி அமல் செய்த முதல் 5 ஆண்டுகள், வரி முறையில் மாற்றத்திற்கான காலம். இந்த காலக்கட்டத்தில் மத்திய அரசிடம் போதுமான நிதி இல்லை என்றாலும், மாநில அரசுகளுக்கு முழுப் பங்கீட்டைக் கொடுக்க வேண்டுமா?
அட்டர்னி ஜெனரலின் பதில்: நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு முழு நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும்.
மத்திய அரசு: நிதிப் பற்றாக்குறையில் ஒரு பகுதியையா அல்லது மொத்தத்தையும் மத்திய அரசு சுமக்க வேண்டும்?
அட்டர்னி ஜெனரலின் பதில்: இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் எதிர்க்க முடியாது.
மத்திய அரசு: 5 ஆண்டு காலக்கட்டம் என்பது நீட்டிக்கப்படலாமா?
அட்டர்னி ஜெனரலின் பதில்: மாநில அரசுகள் ஒப்புக் கொள்ளாமல் மாற்றம் செய்யக் கூடாது
நிதி அமைச்சகம்: ஜிஎஸ்டி நிதியிலிருந்து இழப்பீடு கொடுக்கப்படும் என்று தெரிவித்தால், மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ளலாமா?
அட்டர்னி ஜெனரலின் பதில்: அப்படி செய்யலாம். ஆனால், மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தான் அவர்கள் கடன் வாங்க முடியும்.