ஹைலைட்ஸ்
- 8 வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்தார் மனுஷ்
- மன்சூர் அலிகான் கைதுக்குப் பிறகு மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்
- இந்தத் திட்டத்துக்கு விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்
Salem, Tamil Nadu: சென்னை - சேலம் 8 வழி அதிவேகச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடி வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் மத்தியிலும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டத்தால் 2,000 ஏக்கர் விலை நிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராக பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பியூஸ் மனுஷின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வன்முறையைத் தூண்டும் வகையில் பியூஸ் மனுஷ் பேசியுள்ளார்’ என்று கூறி மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பிரச்னை தமிழக அளவில் பிரளயத்தைக் கிளப்பி வரும் நிலையில், ‘அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறுது. இந்தத் திட்டம் மக்களின் நலனுக்காகவே செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு மக்களின் குரலைக் கேட்டு அதற்கு தகுந்தாற் போல் நடக்கும்’ என்று தெரிவித்துள்ளார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.
சேலம் மத்திய சிறையில் தற்போது மனுஷ் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள், ‘மக்களின் குரலைக் கேட்கவில்லை என்றால், தூத்துக்குடியில் நடந்தது போல் ஒரு சம்பவம் சேலத்திலும் நடக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக பேசினாலே கைது செய்யப்படும் நிலை இருப்பதையும் பல அரசியல் கடசித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.