This Article is From Aug 15, 2020

இ.பி.எஸ் VS ஓ.பி.எஸ் முடிவுக்கு வந்த முதலவர் வேட்பாளர் சர்ச்சை; கூட்டாக அறிக்கை வெளியீடு!

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவு மேற்கொள்ளப்படும்

இ.பி.எஸ் VS ஓ.பி.எஸ் முடிவுக்கு வந்த முதலவர் வேட்பாளர் சர்ச்சை; கூட்டாக அறிக்கை வெளியீடு!

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத் தேர்தல் நடைபெற உள்ளது

Chennai:

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என தேனி மாவட்டத்தில் நேற்று இரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய போஸ்டர்

நாடு முழுவதும் 74வது சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் துனை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதில் அம்மாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த சில நாட்களாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து பல முரண்பட்ட கருத்துக்களை அதிமுக அமைச்சர்கள் தெரிவித்து வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்” என டிவிட் செய்திருந்தார். அதே நேரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமைதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று கூறியிருந்தார். இப்படியான தொடர் முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவில், “உரிய நேரத்தில் ஆலோசித்து தலைமை கழகம் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.” என அதிமுக துனை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

emilp0c

தேனியில் ஒட்டப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்.

பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள்

இந்நிலையில் தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் காரணமாக, சென்னையில் உள்ள துனை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில் பேச்சு வார்த்தை முற்று பெற்றதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸை சந்தித்த அத்துனை அமைச்சர்களும் கூட்டாக முதல்வர் பழனிசாமியையும் சந்தித்தனர். மீண்டு இரண்டாவது முறையாக ஓ.பி.எஸ் உடனான சந்திப்பு நீடித்ததது. இந்நிலையில் தற்போது, முதல்வர் மற்றும் துனை முதல்வர் இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

கூட்டு அறிக்கை

அதில், “கருத்து பரிமாற்றங்கள் செய்வதால் எதையும் சாதிக்கப்போவதில்லை என்றும் ஊடக விவாதங்களில் அதிமுக அரசின் சாதனைகள் பற்றி எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கட்சியின் ஒப்புதல் இன்றி பிற தகவல்களை பேசக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

“கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவு மேற்கொள்ளப்படும்” என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

.