Coimbatore, Tamil Nadu: கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று பேரிடரிலிருந்து தப்பிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, 19 வயது மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
கோயம்புத்தூரில் இருக்கும் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ படித்து வந்தார் லோகேஷ்வரி. கல்லூரியில் நேற்று பேரிடர் ஏற்படும் போது எப்படித் தப்பிப்பது என்பது குறித்த பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் லோகேஷ்வரி ஈடுபட்டிருந்தார்.
பேரிடர் ஏற்பட்டால், இரண்டாவது மாடி கட்டடத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்காக பயிற்சியாளர் ஆறுமுகன், லோகேஷ்வரியை ஸ்லேப்க்கு வர சொல்லியுள்ளார். ஸ்லேபின் மீது அமர்ந்திருக்கும் லோகேஷ்வரியை கீழே குதிக்குமாறு ஆறுமுகன் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு லோகேஷ்வரி மறுப்புத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆறுமுகன், லோகேஷ்வரியை கீழே தள்ளியுள்ளதாக நேரில் இருந்த சிலர் கூறுகின்றனர்.
கீழே வரும் லோகேஷ்வரியைப் பிடிக்க பலர் நின்றிருந்தபோதும் அவர் தரையில் விழுந்துள்ளார். இதனால் அவரது தலையிலிருந்து ரத்தம், வெள்ளமாக வழிந்தோடியுள்ளது.
அதிர்ச்சியடைந்த மாணவர்கள், லோகேஷ்வரியை அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. பின்னர் அரசு மருத்துவமனைக்கு லோகேஷ்வரி கொண்டு செல்லப்படுகிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் ஆறுமுகனை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.