This Article is From Dec 10, 2019

முதலில் எதிர்ப்பு, பின்னர் ஆதரவு: Citizenship மசோதாவில் பல்டியடித்த சிவசேனா!

Shiv Sena on Citizenship (Amendment) Bill: 12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. 311 லோக்சபா உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Citizenship (Amendment) Bill - அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இந்த மசோதா என்னும் வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • லோக்சபாவில் Citizenship (Amendment) Bill-க்கு சேனா ஆதரவு
  • பாஜக அமைச்சர், சிவசேனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
  • 'நாட்டு நலனிற்காக மசோதாவிற்கு ஆதரவு!'- சிவசேனா
New Delhi:

Citizenship Amendment Bill - மத்திய அரசு, லோக்சபாவில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, 2019-க்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது சிவசேனா. ஆனால், மசோதா குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். தனது அதிகாரபூர்வ நாளிதழான “சாம்னா”-வில், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியிருந்தது சிவசேனா. “இந்த மசோதா கண்ணுக்குப் புலப்படாத பிரிவினையை உருவாக்குகிறது,” என்று சாடியது. ஆனால், தற்போது அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்துள்ளது. 

“நாங்கள் தேச நலனிற்காக மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தோம். காங்கிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும், அந்தக் கட்சிகளோடு உடன்பாடு என்பது மகாராஷ்டிராவிற்கு மட்டுமே பொருந்தும்,” என்று சிவசேனா எம்.பி., அரவிந்த் சாவந்த் NDTV-க்குப் பேட்டி அளித்துள்ளார். 

பாஜக கூட்டணியிலிருந்த சிவசேனா, மகாராஷ்டிராவில் அதிகாரப் பங்கீடு கொடுக்கவில்லை என்பதை முன்னிருத்தி கூட்டணியை முறித்தது. தொடர்ந்து நேரெதிர் கொள்கைகளைக் கொண்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அரியணையிலும் ஏறிவிட்டது சேனா. இந்தக் கூட்டணியை தக்கவைத்திருப்பதுதான் குறைந்தபட்ச செயல் திட்டடம் (Common Minimum Progrmme - CMP). காங்கிரஸ் தரப்பு, மசோதாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில் சேனா, அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான், ‘சிஎம்பி மகாராஷ்டிராவிற்கு உள்ளே மட்டுமே' என்று புதிய பதிலைத் தெரிவித்துள்ளது சிவசேனா. 

12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. 311 லோக்சபா உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க, 80 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இந்த மசோதா என்னும் வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசும்போது, “0.001 சதவிகிதம் கூட இது இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல,” என்று முழங்கினார். 

மேலும் அவர் காங்கிரஸ் எதிர்ப்பிற்கு, “1947 ஆம் ஆண்டு இந்த நாட்டை மத ரீதியில் பிரித்தது காங்கிரஸ்தான். அப்படி இருக்கையில் இந்த மசோதா எப்படி பாரபட்சமானது என்று அக்கட்சி சொல்லலாம்,” என்றார். 

இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

சிவசேனா, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததை வரவேற்றுள்ள நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி, “நான் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நாட்டின் நலனிற்கு இந்த மசோதா அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். நாங்கள் அனைத்துக் கட்சிகளிடமும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டிருந்தோம்,” என்றார். அவர் இந்த இணக்கம் மகாராஷ்டிராவிலும் தொடருமா என்பது குறித்துப் பேசுகையில், “அது சேனாவின் கையில்தான் உள்ளது,” என்றார். 

திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, 2019 மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தியாவில் சுலபமாக குடியுரிமை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் நாட்டின் மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் என்றும் பல எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களின்  சில பகுதிகளில் 11 மணி நேர பந்த் நடத்தப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் வடகிழக்கில் இந்த மசோதா அமல் செய்யப்படாது என்று அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு அங்கு இருக்கும் சிறப்பு ஏற்பாடு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த சிறப்பு அந்தஸ்து விரைவில் நீக்கப்பட்டு, அங்கும் மசோதா அமல் செய்யப்படும் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

.