This Article is From Jun 08, 2020

அன்லாக் 1: பல்வேறு மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் திறப்பு!

Unlock1: நாடு முழுவதும் மூடப்பட்ட உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றை படிப்படியாக திறப்பதற்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. 

அன்லாக் 1: பல்வேறு மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் திறப்பு!

New Delhi:

இரண்டு மாதங்களுக்கு பின்னர், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில், வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, நாடு முழுவதும் மூடப்பட்ட உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றை படிப்படியாக திறப்பதற்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. 

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ள இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இதன் காரணமாக அங்கு மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், உணவகங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று உணவகங்கள் மீண்டும் திறகப்பட்டுள்ளன. இதற்காக மாநில அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 50 சதவீத இருக்கைகள் மட்டுமே உணவகங்களில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்னரும், மேஜைகளும், நாற்காளிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் சுமார் 50,000 உணவகங்கள் உள்ளன, சென்னையில் மட்டும் 20,000 உணவகங்கள் உள்ளன.

உத்தரபிரதேசத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள மிக முக்கியமான இடமாக 'அயோத்தி' ராம் ஜன்மபூமி அல்லது ராமரின் பிறப்பிடத்திற்குள் உள்ள ராமரின் தற்காலிக ஆலயம் ஆகும். தொடர்ந்து, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று காலை கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.

உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிகமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் கோவிலான, ஆந்திராவின் திருமலையில் உள்ள திருப்பதி கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனாவுக்கு முன்பு அந்த கோவிலில் தினமும் 80,000 முதல் 1 லட்சம் பேர் வரை தரிசனம் மேற்கொள்வார்கள்.

ஆனால், தற்போது சோதனை முன்பதிவின் ஒரு பகுதியாக 6,873 பேர் மட்டுமே வருகை தர ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். திருமலை மற்றும் திருப்பதி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தீர்த்தம் (புனித நீர்) வழங்க அனுமதிக்குமாறு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தெலுங்கானாவிலும், மத வழிபாட்டு தலங்கள், மால்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை கடும் கட்டுபாடுகளுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளையும் கால்களையும் கழுவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

.