ஹைலைட்ஸ்
- கொல்லப்பட்ட குழந்தை உணவின்றி இருந்துள்ளதாக தகவல்
- சிறுமியின் பிரேத பரிசோதனை வெளிவந்தது
- சாமியார் ஒருவரின் சொல்படிதான் சிறமியின் பெற்றோர் நடந்துள்ளனர், போலீஸ்
Moradabad: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 6 வயது பெண் குழந்தையை வீட்டிற்கு உள்ளேயே புதைத்துக் கொன்றுள்ளதாக பரபரப்புப் புகார் எழுந்துள்ளது. அவர்கள், உள்ளூர் சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு இப்படிப்பட்ட காரியத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனந்தபாலின் வீட்டில், அவரது குழந்தை கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக போலீஸுக்கு அக்கம் பக்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவல் துறை, வீட்டில் இருந்த ஒரு இடத்தைத் தோண்டிப் பார்த்துள்ளனர். அதில் ஆனந்தபாலின் 6 வயது பெண் குழந்தை தாரா புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தாராவின் பெற்றோர், ‘சாமியார் ஒருவரின் சொல்படிதான் குழந்தையைப் புதைத்தோம்’ என்று போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.
தாராவுக்கு எலும்புத் தேய்மான நோய் இருந்துள்ளது. அவருக்கு எவ்வளவு சிகிச்சைகள் கொடுத்த போதிலும், நல்ல உடல் ஆரோக்கியம் திரும்பவில்லை. இதனால், விரக்தியடைந்த தாராவின் பெற்றோர் சாமியார் ஒருவரை சென்று சந்தித்துள்ளனர். அவர்தான் தாராவை புதைத்தால், ஆரோக்கியமான இன்னொரு குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதன்படிதான் இருவரும் நடந்துள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து தாராவின் பாட்டி, ‘தாராவின் அம்மா, அவளை பிரிய விரும்பவில்லை. அதனால்தான் அவளை வீட்டிலேயே புதைக்க முடிவு செய்தார்கள். தாராவின் நினைவாக அவர்கள் ஒரு கோயிலையும் புதைத்த இடத்தில் கட்ட திட்டமிட்டிருந்தனர். தாராவுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளையும் கொடுத்து பார்த்தோம். ஆனால், அவள் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து கொண்டே போனாள். அதனால், என் பேரனுக்கும் எலும்புத் தேய்மான நோய் தாக்கியது’ என்று கூறினார்.
தாராவின் உடம்பில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரின் வயிற்றில் எந்த உணவும் இல்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது. தாராவின் பெற்றோர்கள் கைது செய்து விசாரிக்கப்படுவர் என்று போலீஸ் தரப்பு கூறியுள்ளது.